அண்ணா தி.மு.க மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வரும் 27-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் காலை 10 மணிக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை பிரச்சனை காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து இரு தரப்பும் தாங்கள் அதிமுக என கூறி வருகின்றனர். ஓபிஎஸ் தனது அணியை பலப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ளார். இதே போல மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகளை நியமித்துள்ளார். இதனையடுத்து ஓபிஎஸ் அணி சார்பாக நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் ஓபிஎஸ் மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பன்ருட்டி ராமசத்திரன் தலைமையில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நீதிமன்ற வழக்கு, தொண்டர்களை சந்திக்கும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 27.12.2022 - செவ்வாய்க் கிழமை காலை 10 மணிக்கு, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக செய்தித் தொடர்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் அணி சார்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இபிஎஸ் தரப்பும் தங்கள் தரப்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் அணியின் செயல்பாடு, நீதிமன்ற வழக்கு, தமிழகத்தில் பாஜக- அதிமுக நிர்வாகிகள் மோதல், நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
நாங்க கொண்டு வந்த திட்டத்தை இனி எந்த அரசாலும் கொண்டுவர முடியாது.. மார்த்தட்டும் இபிஎஸ்..!