100% வாக்குறுதியை திமுக நிறைவேற்றி விட்டதா.? வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா.? ஸ்டாலினை விளாசும் இபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Sep 19, 2023, 12:13 PM IST

 உண்மையே பேசாமல், விளம்பரங்கள் மற்றும் அறிக்கைகள் மூலம் ஒருவர் முதலமைச்சராக செயல்படுவது நம் மக்களின் தலையெழுத்து என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


திமுகவின் பொய்யான வாக்குறுதி

திமுக தேர்தல் வாக்குறுதி தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இருந்தே, நிறைவேற்ற முடியாத பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களின் வாக்குகளைப் பெற்று, 2019 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றியைப் பெற்றது. அத்தேர்தலின் போது, பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் 38 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு சாதித்தது என்ன ?

Tap to resize

Latest Videos

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒருமுறையாவது திமுக தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ஏதேனும் பேசினார்களா ? சபையின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு ஆர்ப்பாட்டங்களிலாவது ஈடுபட்டார்களா ? 2019-ல் கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளனர் என்ற விவரங்களை திமுக தலைவரும், விடியா அரசின் முதலமைச்சருமான திரு. ஸ்டாலின் வெளியிடத் தயாரா? எனது மேற்கண்ட கேள்விகளுக்கான பதில் 'இல்லை' என்பதே. தமிழக மக்களின் கவனத்தை ‘எளிதில் எதையும் மறக்கடித்துவிடலாம்' என்ற நம்பிக்கையுடன், அதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிப்பது திமுக-வின் பரம்பரை பழக்கம்.

மக்களை ஏமாற்றிய மகளிர் உரிமை தொகை அறிவிப்பு

2021-ல் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது 520-க்கும் மேற்பட்ட நிறைவேற்ற முடியாத பல பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, புறவாசல் வழியாக ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினும், அவரது கூட்டாளிகளும், தமிழக மக்களை ஏமாற்றிவிட்டதாக மனப்பால் குடித்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த 28 மாத கால விடியா திமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள், ஊழல் புகார்கள்; சென்னை உயர்நீதிமன்ற அறிவுரைக்குப் பிறகும் சிறையில் உள்ள ஒருவர் இலாகா இல்லாத அமைச்சர்; ஊழல் பணமான 30,000 கோடியை என்ன செய்வது என்று தெரியாமல் திணறுதல் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் அனைத்து ஊடகங்களிலும் அணி வகுத்து வெளிவந்த போதும், 

விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் சிறிதும் 'நா' கூச்சமின்றி 100 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக 'முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்' அறிக்கை வெளியிட்டுள்ளார். தேர்தல் நேரத்தின் போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000/- வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே என்று, சுமார் 57 லட்சம் விண்ணப்பங்களை நிராகரித்திருப்பது விடியா திமுக அரசின் பித்தலாட்டத்திற்கு ஓர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். குறிப்பாக, 159-வது தேர்தல் வாக்குறுதி எண்:- 'தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகளில் பயின்று, தமிழகக் கல்லூரிகளில் பட்டப் படிப்பை மேற்கொள்ள வங்கிக் கடன் பெற்ற தமிழக மாணவர்கள், ஓராண்டு காலத்துக்குள் கடனை திரும்பச் செலுத்த இயலாவிட்டால், 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கல்விக் கடனை அரசே ஏற்று திருப்பிச் செலுத்தும்'.

கல்விக்கடன் ரத்து என்ன ஆச்சு.?

மாணவர்களின் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த ஏதேனும் முயற்சிகளை செய்தீர்களா விடியா திமுக அரசின் முதனைமச்சரே? இந்த விடியா திமுக ஆட்சியை நம்பி, கல்விக் கடன் பெற்ற மாணவர்களின் வீடுகளில், கல்விக் கடனை திருப்பிச் செலுத்தக் கோரி வங்கி அதிகாரிகள் கடுமையாக மிரட்டிச் சென்றுள்ளனர். கடனை திருப்பிச்செலுத்தாவிட்டால் வங்கி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் (ஜப்தி போன்ற) ஈடுபட நேரிடும் என்று மிரட்டியதாக, கல்விக் கடன் வாங்கிய இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கண்ணீரோடு தெரிவிக்கின்றனர். குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டம், வாய்மேடு பகுதியில் ஒரு நாட்டுடமை வங்கியின் அதிகாரிகள் மிரட்டியது தெரியுமா முதலமைச்சரே? 

இதுபோல் மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் நடைபெற்றதாக செய்திகள் தெரிய வருகிறது. உண்மையே பேசாமல், விளம்பரங்கள் மற்றும் அறிக்கைகள் மூலம் ஒருவர் முதலமைச்சராக செயல்படுவது நம் மக்களின் தலையெழுத்து! நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் தான் என்பதை அறிந்திருந்தும், அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில், நீட் விவகாரத்தில் அனிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்வது தொடங்கி, கல்விக் கடன் ரத்து செய்வது வரை, மாணவர்களை ஏமாற்றி அவர்களின் எதிர்காலத்தை வஞ்சிக்கிறது விடியா திமுக அரசு.

வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா.?

2021 சட்டமன்றப் பொதுத்தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிப்படி,மாணவர்களின் கல்விக் கடனை உடனடியாக ரத்து செய்திட நடவடிக்கை எடுத்து,அவர்களின் துயர் துடைக்க வேண்டுமென கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன். நூறு சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக மார்தட்டிக்கொள்ளும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது, தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், எந்தெந்த தேதிகளில், எந்தெந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டன என்ற விபரத்தை அறிக்கை மூலம் விடியா திமுக அரசின் முதலமைச்சர் அறிவிப்பாரா? சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

click me!