தேர்தல் நேரத்தில் தேவையில்லாத அறிவிப்பு. பதறியடித்து அட்வைஸ் செய்த எடப்பாடியார்.. வாபஸ் பெற்ற மாநகராட்சி.

Published : Dec 24, 2020, 12:37 PM IST
தேர்தல் நேரத்தில் தேவையில்லாத அறிவிப்பு. பதறியடித்து அட்வைஸ் செய்த எடப்பாடியார்..  வாபஸ் பெற்ற மாநகராட்சி.

சுருக்கம்

அதனடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை பயனாளர்களின் பயனாளர் கட்டணத்தை சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என மாநகராட்சியால்  அறிவிக்கப்பட்டிருந்தது.  

தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது சார்பில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 இன் படி பெருநகர சென்னை  மாநகராட்சியால் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019  இயற்றப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் தமிழக அரசின் அனுமதி பெறப்பட்டு சென்னை மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்ட இந்த திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கழிவு உருவாக்குபவர்கள் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும்.

அதனடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை பயனாளர்களின் பயனாளர் கட்டணத்தை சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என மாநகராட்சியால்  அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திடக்கழிவு  மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தை நிறுத்திவைக்க வேண்டும் என பொதுமக்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு குடியிருப்பு நல சங்க பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். எனவே பெருநகர சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட திடக்கழிவு  மேலாண்மை பயனாளர் கட்டணம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது என சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். 

அதாவது, திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் என்ற பெயரில் சென்னை மாநகர மக்களிடையே சொத்துவரி யுடன் கூடுதலாக குப்பை கொட்ட கட்டணம் செலுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது கொரோனா நெருக்கடியால் வருமானம் இன்றி தவிக்கும் மக்கள் மீது விழும் அடி இது என பொதுமக்கள் விமர்சித்து வந்தனர். ஆயிரம் பேருக்கு மேல் கூடுகின்ற நிகழ்ச்சிகளை நடத்துபவர் 20,000 ரூபாய் திடக்கழிவு மேலாண்மை பயனர் கட்டணமாக செலுத்த வேண்டும் என பல வகையான கட்டணங்களை மாநகராட்சி அறிவித்திருந்த நிலையில், இதற்கு அரசியல் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தேர்தல் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இந்த கட்டணத்தை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!