11ம் வகுப்பிற்கு நுழைவுத் தேர்வு..! சொதப்பிய அமைச்சர் அன்பில் மகேஷ்...! கண்கள் சிவந்த மு.க.ஸ்டாலின்..!

By Selva KathirFirst Published Jun 11, 2021, 11:19 AM IST
Highlights

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது முழுக்க முழுக்க பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் முறையில் கவனம் செலுத்தி வருவதாகவும் இதனால் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை விவகாரத்தில் நுழைவுத் தேர்வு அம்சத்தை அவர் கவனிக்காமல் விட்டுவிட்டதாகவும் பிறகு பிரச்சனை ஆனதும் அது திருத்தப்பட்டதாகவும் கோட்டை வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 11ம் வகுப்பி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்த அனுமதித்து வெளியான பள்ளிக்கல்வித்துறை உத்தரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முகம் சிவக்க வைத்ததாக கூறுகிறார்கள்.

கொரோனா காரணமாக கடந்த ஓராண்டாகவே பள்ளிகள் மூடப்பட்டு கிடக்கின்றன. 12ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்த தமிழக அரச மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதே போல் பத்தாம் வகுப்பிற்கு முன்னரே தேர்வு இல்லை என்று தமிழக அரசு அறிவித்துவிட்டது. இதே போல் பத்தாம் வகுப்பிற்கு கடந்த ஆண்டு திருப்புதல் உள்ளிட்ட எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. இதனால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கொடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே 11ம் வகுப்பிற்கு மாணவர் சேர்க்கையை எந்த அடிப்படையில் மேற்கொள்வது என்கிற குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் கடந்த செவ்வாயன்று அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அந்த சுற்றறிக்கையில் 10ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என்பதால் 11ம் வகுப்பில் மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது அவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அனைவரும் பாஸ் என்பதால் வழக்கமாக அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை விட ஒவ்வொரு பிரிவிலும் 15 சதவீதம் வரை கூடுதல் மாணவர்களை அனுமதிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. அதை விட கூடுதலாக விண்ணப்பம் வந்தால் பள்ளி அளவில் தேர்வு வைத்து மாணவர்களுக்கான பாடப்பிரிவுகளை ஒதுக்கலாம் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நுழைவுத் தேர்வு என்பதற்கே திமுக முழுக்க முழுக்க எதிரான நிலைப்பாட்டில் உள்ளது. நீட் தேர்வு முதல் தேசிய அளவிலான அனைத்து நுழைவுத் தேர்வுகளும் வேண்டாம் என்பது தான் திமுகவின் நிலைப்பாடு. ஆனால் திமுக அரசின் பள்ளிக்கல்வித்துறை 11ம் வகுப்பிற்கே நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாமக நிறுவனர் ராமதாசும் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதனை அடுத்த முதல் சுற்றறிக்கை வெளியான அடுத்த 24 மணி நேரத்திற்குள் மற்றொரு சுற்றறிக்கையை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டார்.

அதில் கூடுதல் மாணவர்கள் குறிப்பிட்ட பாடப்பிரிவிற்கு விண்ணப்பித்தால் 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒதுக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மேலும் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு எனும் உத்தரவும் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு என்கிற சுற்றறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கே செல்லாமல் வெளியிடப்பட்டதாக கூறுகிறார்கள். பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரின் அறிக்கை வெளியான பிறகு இதனை அறிந்து முதலமைச்சர் ஸ்டாலின் டென்சன் ஆனதாக கூறுகிறார்கள்.

இதை அடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை அழைத்து மு.க.ஸ்டாலின் பேசிய பிறகே நுழைவுத் தேர்வு ரத்து அறிவிப்பு வெளியானதாகவும் சொல்கிறார்கள். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது முழுக்க முழுக்க பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் முறையில் கவனம் செலுத்தி வருவதாகவும் இதனால் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை விவகாரத்தில் நுழைவுத் தேர்வு அம்சத்தை அவர் கவனிக்காமல் விட்டுவிட்டதாகவும் பிறகு பிரச்சனை ஆனதும் அது திருத்தப்பட்டதாகவும் கோட்டை வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

click me!