
தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
சுமார் 22 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேபால் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார் ஆகியோரது வீடுகளிலும், அலுவலகங்களிலும், உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. பணமும் கைப்பற்றப்பட்டன.
இதுதொடர்பாக கோவை வருமான வரித்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதில், விஜயபாஸ்கருக்கு சொந்தமான அலுவலகங்கள், குவாரிகள், கல்லூரி உள்பட பல இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி, அண்ணன் உதயகுமார், ஆடிட்டர் ஜெயராமன் ஆகியோர் திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் விளக்கம் அளிக்க சென்றுள்ளனர்.