
என்ஜினியரிங் படிப்புக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் முறை குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் என்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு இன்று முதல் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 562 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ. அல்லது பி.டெக். படிப்புகளுக்கு மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
இந்த வருடம் முதன் முதலாக ஆன்-லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று முதல் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியிருந்தது. அதே நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது குறித்து இணையதள முகவரி அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் 42 உதவி மையங்களுக்குச் சென்று இலவசமாக பதிவு செய்யவும் வசதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்கள், ரிசல்ட் வரும் வரை காத்திருக்க தேவையில்லை. தேர்வு வந்தபிறகு அரசு தேர்வுத்துறையில் இருந்து சி.டி., அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்படும. இந்த சிடியில் உள்ள மதிப்பெண்களைப் பார்த்தே விண்ணப்பத்த மாணவர்களின் மதிப்பெண்கள் விண்ணப்பத்தில் பதிவு செய்யப்படும் என்று கூறியிருந்தது. இதற்கு கடைசி தேதி 30 ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், என்ஜினியரிங் படிப்புகளுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் முறையை எதிர்த்து திமுக எம்எல்ஏ எழிலரசன், வழக்கறிஞர் பொன்பாண்டியன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையின்போது, ஒரு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழகமும் பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.