33,465 கோடி ரூபாய் முதலீட்டில் 2,19,714 நபர்களுக்கு வேலைவாய்ப்பு.. முதலமைச்சர் எடப்பாடியார் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Feb 16, 2021, 4:14 PM IST
Highlights

தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 மற்றும் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்கை 2021 ஆகியவற்றை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 மற்றும் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்கை 2021 ஆகியவற்றை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் எம் சி சம்பத், தொழில் துறை முதன்மை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். 28,053 கோடி ரூபாய் முதலீட்டில் 28 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடல், 10 புதிய தொழில் பூங்காக்கள் மற்றும் தொழிற்பேட்டைகள் அடிக்கல் நாட்டுதல்,  மற்றும் 3,489 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகள் துவக்கம் என மொத்தம்  33,465 கோடி ரூபாய் முதலீட்டில் 2,19,714 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெற வகையில்,46 திட்டப்பணிகளை தமிழக முதலமைச்சர் துவங்கி வைத்தார்..

புதிய தொழில் கொள்கை – 2021 

தமிழ்நாட்டில் வரும் ஆண்டுகளில் தொழில் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளிக்க புதிய தொழில் கொள்கை – 2021 வெளியிடப்பட்டது. அடுத்த 4 ஆண்டுகளில்,   10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடவும், உற்பத்தித் துறையில் ஆண்டுக்கு 15 சதவீதம் வளர்ச்சியை அடைந்திடவும், 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் உற்பத்தித் துறையின் பங்களிப்பை 30 சதவீதமாக உயர்த்திடவும் இலக்கு நிர்ணயித்து, புதிய வெற்றிப் பயணத்தினை துவக்கி வைத்து, இந்த புதிய தொழிற்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. 

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக தொழில் கொள்கை:

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் கொள்கையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். வளர்ச்சியை பரவலாக்கிடவும், சோதனைகளை சாதனையாக்கும் திறமை நிறைந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்கவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் 2லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் இலக்கு நிர்ணயித்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. 

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:

28,053 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 68,775 நபர்களுக்கு  புதிய வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், 28 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த முதலீடுகளில், மின் வாகனங்கள், காற்றாலை எரிசக்தி, மோட்டார் வாகன உதிரிபாகங்கள், நகர எரிவாயு விநியோகம், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தம் தவிர தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் இங்கிலாந்து - இந்தியா வணிக சபை இடையே ஒரு நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
 
தொழிற் திட்டங்கள்: 

3377 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 7139 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கும் 8 நிறுவனங்களின் தொழில் திட்டங்களையும் தமிழக முதலமைச்சர் துவங்கி வைத்தார்..

தபால் தலை வெளியீடு:

சிப்காட் நிறுவனத்தின் பொன்விழாவினையொட்டி தபால் தலையையும் தமிழக முதலமைச்சர் வெளியிட்டார். 1971ம் ஆண்டில் நிறுவப்பெற்ற இந்நிறுவனம், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 15 மாவட்டங்களில், ஏறத்தாழ 34000 ஏக்கர் நிலப்பரப்பளவில் பரந்து விரிந்து, 6 சிறப்புப் 
பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட 23 தொழில் பூங்காக்களை உருவாக்கிச் சாதனை புரிந்துள்ளது சிப்காட் நிறுவனம்.


தொழில் புத்தாக்க மையம் துவக்கம்:  

சிப்காட் நிறுவனத்தின் திருப்பெரும்புதூர் மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள தொழிற் பூங்காக்களில் தொழில் புத்தாக மையங்கள் துவக்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு புத்தாக்க மையமும்,20 கோடி ரூபாய் திட்ட செலவில் பொருத்தமான தொழில்நுட்ப பங்குரிமையாளருடன் வடிவமைத்து,பராமரிக்க கருதப்பட்டு வருகிறது. இந்த முயற்சியினால் மேம்பட்ட உற்பத்தி, வருங்கால நகர்வு, வானூர்திப் பூங்கா பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றிற்கான அடிப்படையில் தொழில் திட்டங்களில், தொழில்நுட்பத்தினை உரித்தாக்கிக் கொள்ளுதலை விரைவுபடுத்திட தமிழ்நாடு அரசு கருதி வருகிறது.

மேலும், சிப்காட் நிறுவனத்தின் புதிய தொழிற்பூங்காக்களுக்கும் தமிழக முதலமைச்சர்  அடிக்கல் நாட்டினார்..இந்த ஒப்பந்தங்கம் மூலம் சுமார் 2.25 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.கொரோனா பாதிப்பை தொடர்ந்து தமிழகத்தில் வேலையின்னை பிரச்சனை நிலவும் சூழலில், இந்த ஒப்பந்தங்கள் மூலம் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
 

click me!