உணர்ச்சி பிழம்பான மதுசூதனன் இறுதி நிகழ்ச்சி.. ஓபிஎஸ்-இபிஎஸ்க்கு நடுவில் அமர்ந்த ஸ்டாலின்.. உருகிய தொண்டர்கள்.

By Ezhilarasan BabuFirst Published Aug 6, 2021, 11:28 AM IST
Highlights

அப்போது அங்கிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை கைகூப்பி வரவேற்றனர். 

மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அங்கு ஓபிஎஸ் இபிஎஸ்க்கு நடுவில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து துயரத்தில் பங்கெடுத்துக் கொண்டது. இரு கட்சி தொண்டர்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்கையில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் துக்க நிகழ்ச்சியில் தலைவர்கள் பரஸ்பரம் சந்தித்து துயரையும் பகிர்ந்து  கொண்ட நிகழ்வு இறுதிச் சடங்கை உணர்ச்சிப் பிழம்பாக மாற்றியது. 

அதிமுகவின் மூத்த முன்னோடியும், அக்கட்சியின் அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் மறைவு அக்கட்சி தொண்டர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மதுசூதனன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். கட்சியின் மூத்த முன்னோடி இழந்து தவிக்கும் அதிமுக தொண்டர்களுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் செய்தி வெளியிட்டு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அடுத்த மூன்று தினங்களுக்கு கட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன்,  3 நாள் துக்கம் அனுசரிப்புடன், அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என அக்கட்சி அறிவித்துள்ளது. 

இந்நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மதுசூதனன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மதுசூதன உடலுக்கு நேரில்  அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை கைகூப்பி வரவேற்றனர். முதல்வரும் வணக்கம் தெரிவித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது உடன் இருந்த அமைச்சர் சேகர்பாபு மதுசூதனன் உடலை பார்த்து கண்கலங்கினார். பகைமறந்து முதல்வர் ஸ்டாலின் அதிமுகவின் மூத்த தலைவர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்த வந்ததை கண்டு ஓபிஎஸ் -இபிஎஸ் உணர்ச்சிவயத்தில் நெகிழ்ந்தனர்.

இரு கட்சிகளுக்கும் இடையில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதை அனைத்தையும் களைந்து முன்னாள் முதல்வர் இன்னாள் முதல்வர் என சகிதம்  இரங்கலை பரிமாறிக் கொண்டது நிகழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. அஞ்சலி நிகழ்ச்சியில் அதிமுக தலைவர்கள் அமர்ந்திருந்த வரிசையில் ஓபிஎஸ் இபிஎஸ்க்கு இடையில் முதல்வர் ஸ்டாலின் மிக நெருக்கமாக அமர்ந்து, அவர்களிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார். இந்த காட்சி அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களை உணர்ச்சிவயத்தில் ஆழ்த்தியது. தமிழக அரசியலின் இரு துருவங்கள் தோளோடு தோள் நின்று துயரில் பங்கெடுத்த தருணம் அந்த இடத்தை உணர்ச்சிப் பிழம்பாக மாறியது. இதில் கட்சி பாகுபாடு மறைந்தது தொண்டர்கள் நெகிழ்ச்சியில் திளைத்தனர். 

 

click me!