அ.தி.மு.க.வில் அவசர நிலை!? படபடத்த முதல்வர், பதறி ஓடி வரும் அமைச்சர்கள்: என்னதான் நடக்குது க்ரீன்வேஸ் சாலையில்?

By sathish kFirst Published Sep 13, 2018, 6:04 PM IST
Highlights

தமிழக முதல்வர் எடப்பாடியார் இன்று மாலை 6:30 மணிக்கு க்ரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் மூத்த அமைச்சர்களுடன்  அவசர ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடியார் இன்று மாலை 6:30 மணிக்கு க்ரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் மூத்த அமைச்சர்களுடன்  அவசர ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார்.தீயாக பரவ துவங்கியிருக்கும் இந்த தகவலால் அ.தி.மு.க. பரபரத்துக் கிடக்கிறது. 

கடந்த சில நாட்களாக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் சூழ்நிலை சுகமாக இல்லை. குறிப்பாக நாடாளுமன்ற துணை சபாநாயகரான தம்பிதுரை மத்திய அரசை விமர்சித்து கடந்த வாரம் தொடர்ந்து பேசி வந்தார். தி.மு.க.வுடன் கூட்டணிக்கு பி.ஜே.பி. முயல்வதாக சித்தரிக்கும் தொனியிலேயே இருந்தது அவரது பேச்சு.

அதிலும் அழகிரியின் பேரணியன்று, அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் வீட்டில் ஐ.டி. ரெய்டு நடக்க காரணமே அந்த பேரணியின் முக்கியத்துவத்தை குறைக்கத்தான்! என்றும், மத்திய அரசு இதை செய்வதற்கு காரணமே ஸ்டாலினுக்கு உதவிடத்தான்! என்றும் தரையிறங்கி தாக்கினார் தம்பி துரை. இந்த விமர்சனம் டெல்லியை கடுப்பாக்கியது. 

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையுயர்வு விவகாரத்தில் மோடி அரசை ரொம்பவே சீண்டி, ஏதோ காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ரேஞ்சுக்கு பேசிவிட்டது அ.தி.மு.க. இதனால் கடுப்பின் உச்சத்துக்கு போய்விட்டது அமித்ஷா வட்டாரம். 

இந்த தொடர் சீண்டல்களின் விளைவாக பெரும்பான்மையின்றி ஓடிக் கொண்டிருக்கும் எடப்பாடி அரசுக்கு சிக்கல் வரலாம்! மேலும் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீதான ’ஊழல்’ வழக்குகள் மிக கடுமையாக சூடுபிடிக்கும்! ஆக மொத்தத்தில் அ.தி.மு.க. அரசுக்கு நித்ய கண்டம் உருவாகியுள்ளது! என்று பேச்சு எழுந்துள்ளது. 

இந்நிலையில்தான் முதல்வர் திடீரென அவசர அமைச்சர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்! என்கிறார்கள். 

மதுரை அங்கேயிங்கே என்று பல ஊர்களில் இருந்த அமைச்சர்கள் அடித்துப் இடித்துக் கொண்டு சென்னைக்கு வந்திருக்கிறார்கள். 
இந்த விஷயம் குறித்து அ.தி.மு.க.வின் முக்கிய வட்டாரத்தில் விசாரித்தால் , ‘சீரியஸாக ஒன்றுமில்லை. மாநில வளர்ச்சி பற்றிய விஷயம் பற்றி பேசத்தான்.’ என்கிறார்கள். நம்பிட்டோம்! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

click me!