இன்று மாலை அவசர ஆலோசனை.. தன்னிச்சையாக அறிவித்த ஓபிஎஸ்! என்ன நடக்கிறது அதிமுகவில்?

By Selva KathirFirst Published Sep 18, 2020, 9:17 AM IST
Highlights

அதிமுக தலைமையகத்தில் இன்று மாலை நான்கு மணிக்கு தலைமை கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக ஓபிஎஸ் தன்னிச்சையாக அறிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக தலைமையகத்தில் இன்று மாலை நான்கு மணிக்கு தலைமை கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக ஓபிஎஸ் தன்னிச்சையாக அறிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக தலைமையகத்திற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் வர உள்ளனர், தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர் என்று கடந்த மூன்று நாட்களாகவே சென்னையில் தகவல்கள் றெக்கை கட்டி பறந்து கொண்டிருந்தன. நேற்று மாலை நான்கு மணிக்கு ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை அதிமுக தலைமை மறுக்கவும் இல்லை உறுதிப்படுத்தவும் இல்லை. இதனால் நேற்று பிற்பகலில் இருந்தே அதிமுக தலைமை அலுகலத்தில் செய்தியாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

ஆனால் தகவல் வெளியானது போல் அதிமுக தலைமையகத்தில் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. இதற்கு காரணம் கூட்டத்திற்கு வர ஓபிஎஸ் சம்மதிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகின. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பு முன்னெடுத்த இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்க புறப்படாத நிலையில், தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க எடப்பாடி பழனிசாமியும் ராயப்பேட்டை தலைமையகம் வருவதை தவிர்த்துவிட்டார். முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்புக்கு இடையிலான பிரச்சனை நீரு பூர்த்த நெருப்பாகவே உள்ளது என்கிறார்கள்.

எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க ஓபிஎஸ் மறுத்த பிறகு இருவருக்கும் இடையே முன்பிருந்த அதே மனநிலை இல்லை என்கிறார்கள். கட்சி விவகாரம் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் நிலுவையில் உள்ளதாக கூறுகிறார்கள். ஒருவர் சொல்லும் விஷயத்திற்கு மற்றொருவர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், மற்றொருவர் எதிர்ப்பதை இன்னொருவர் பிடிவாதமாக வேண்டும் என்று இருப்பதாகவும் கூறுகிறார்கள். நிர்வாகிகள் நியமனம், கட்சியின் வரவு செலவு விவகாரங்களில் கூட ஒருவர் சொல்வதை இன்னொருவர் ஏற்க மறுத்து கையெழுத்திடாமல் வைத்திருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

இந்த நிலையில் தான் தேர்தல் வியூகம் குறித்து பேச தலைமையகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை எடப்பாடி தரப்பு ஏற்பாடு செய்ததாக சொல்கிறார்கள். ஆனால் இந்த கூட்டத்திற்கு பல்வேறு காரணங்களை கூறி ஓபிஎஸ் வராமல் இருந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். இந்த நிலையில் ஓபிஎஸ் வராத நிலையில் கூட்டத்தை நடத்த முடியாத அதிருப்தியில் தனது வீட்டிலேயே முக்கிய நிர்வாகிகளை அழைத்து எடப்பாடி பழனிசாமி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாக சொல்கிறார்கள். இந்த ஆலோசனையின் முடிவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

முதலமைச்சர் வீட்டில் நடைபெற்ற இந்த ஆலோசனையை தொடர்ந்து தலைமை கழக நிர்வாகிகள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வீட்டிற்கு
செல்ல இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் எடப்பாடி அப்படி எல்லாம் யாரும் போய் ஓபிஎஸ்சை பார்க்க வேண்டாம் என்று கண்டிப்பான உத்தரவு போட்டதாக கூறுகிறார்கள். இதனால் நேற்று முதலமைச்சர் வீட்டில் ஆலோசனையை முடித்துக் கொண்டு முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் நேற்று திடீரென ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

சென்னை இராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் நாளை (18.9.2020) மாலை 4:00 மணியளவில், கழக தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

— O Panneerselvam (@OfficeOfOPS)

 

அதில் நாளை அதாவது இன்று மாலை 4 மணிக்கு அதிமுக தலைமையகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பொதுவாக இது போன்ற அறிவிப்புகளை ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து அறிக்கை மூலமாக தெரிவிப்பதே வழக்கம். ஆனால் இந்த அறிவிப்பை தன்னிச்சையாக ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது. நேற்று எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் நடத்திய ஆலோசனைக்கு பதில் நடவடிக்கையாக ஓபிஎஸ் இன்று ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.

click me!