திமுக கூட்டணியிலிருந்து கட்சிகள் எஸ்கேப்... எல்லாம் அதிமுகவுக்கு வந்துடுவாங்க... ஜெயக்குமார் தாறுமாறு!

By Asianet TamilFirst Published Sep 18, 2020, 8:58 AM IST
Highlights

திமுக கூட்டணியிலிருந்து கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திருமாவளவனுடன் எங்களுக்கு பகை இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “திமுக கூட்டணியிலிருந்து கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், எங்கள் கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் வேறு கூட்டணிக்கு போகாது. தேர்தல் நேரத்தில் அதிமுக கூட்டணியில் நிறைய கட்சிகள் சேரும். தேய்பிறையைப் போல திமுக தேய்ந்து கொண்டிருக்கிறது. அதிமுக வளர்பிறையைப்போல வளர்ந்துகொண்டிருக்கிறது.” என்று ஜெயக்குமார் பதில் அளித்தார். 
சசிகலா சிறையிலிருந்து வருவதால் அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், “ சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பது சட்டத்துக்குத்தான் தெரியும். அவர் விடுதலையாகி வெளியே வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, எங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவருடைய வருகை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவருடைய விஷயத்தில் ஏற்கனவே நாங்கள் என்ன நிலையை எடுத்தோமோ அதே நிலைதான் தொடரும்.” என்று பதில் அளித்தார்.


திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக வருகிறது என்று அக்கட்சியின் துணை  தலைவர் அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், “பாஜகவின் மத்தியில் உள்ளவர்கள், அவர்களின் சார்பில் மாநிலத் தலைவர் ஆகியோரின் கருத்துகள்தான் அதிகாரப்பூர்வமானவை. நேற்றுவரை எங்காவது இருந்துவிட்டு, இன்று பாஜகவில் சேர்ந்து சொல்பவர்களுடைய கருத்தையெல்லாம் கருத்தாகவே எடுத்துக்கொள்ள முடியாது.” என்று ஜெயக்குமார் பதில் அளித்தார்.
 

click me!