உயிரை துச்சமென மதித்து பணியாற்றும் இவர்களை முன்கள பணியாளர்களாக அறிவியுங்கள்.. முதல்வருக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை

By vinoth kumarFirst Published May 26, 2021, 3:58 PM IST
Highlights

மின்வாரிய பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மின்வாரிய பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- “வேளாண் வளர்ச்சிக்கும், தொழில் மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புகள் உருவாகுவதற்கும், பொருளாதார வளர்சிக்கும், இன்றியமையாததாக விளங்குவது, மாறி வரும் இன்றைய நவீன வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருக்கும் மின்சாரம் என்று சொன்னால் அது மிகையாகாது.

முழு ஊரடங்கு காலத்தில் தங்கள் உயிரை துச்சமென மதித்து மின் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா என்ற கொடிய நோய் தாக்கப்பட்டு இதுவரை 200க்கும் மேற்பட்ட மின் வாரிய பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை முன் களப்பணியாளர்கள் அறிவித்து அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது என்றும் நோய்த்தொற்று காரணமாக அவர்கள் உயிரிழக்கும் நிலையில் அவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஆனால் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்கள், முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்படாததால், தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழக்கும் பணியாளர்களுக்கு எந்தவித சலுகையும் கிடைப்பதில்லை என்று எடுத்துக்கூறி, தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அதற்குரிய சலுகைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கோரிக்கை விடுத்திருக்கிறது.

மேலும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இயற்கை எய்தும் மின்வாரிய பணியாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை குஜராத் அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது என்றும் தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். எனவே மின்சார வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வை கருத்தில் கொண்டு அவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்கவும், முன் களப் பணியாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அவர்களுக்கும் கிடைக்கும் தமிழக முதல்மைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.

click me!