தமிழகத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல்.. டெல்லியில் எடுக்கப்பட்ட முடிவு.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

By Selva KathirFirst Published Jan 26, 2021, 11:03 AM IST
Highlights

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தலை நடத்துவது என்று தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தலை நடத்துவது என்று தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக தேர்தலை நடத்தி புதிய சட்டப்பேரவையை உருவாக்க வேண்டும். தற்போது ஜனவரி இறுதி வந்துவிட்ட நிலையில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என 3 மாதங்கள் மட்டுமே தேர்தலுக்கான காலமாக உள்ளது. பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிக்கையை வெளியிட்டால் மே மாத மத்தியில் வாக்குப் பதிவு இருக்கும். கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் மார்ச் மாதம் 6ந் தேதி தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டது. ஏப்ரல் 21ந் தேதி முதேல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

ஏப்ரல் 29ந் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாக இருந்தது. மே 16ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில் மே 19ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த முறை ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு தமிழகம் முழுவதும் சுமார் 65ஆயிரம் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது கொரோனா காலம் என்பதால் இந்த எண்ணிக்கை 90ஆயிரம் முதல் 1 லட்சம் வரை அதிகரிக்கப்படும் என்கிறார்கள். அதாவது கடந்த முறை 1500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

இந்த முறை 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் தான் கடந்த முறையை காட்டிலும் சுமார் 50 சதவீதம் அளவிற்கு வாக்குப்பதிவு மையங்கள் அதிகமாக உள்ளது. இப்படி வாக்குப் பதிவு மையங்களை அதிகரித்தால் தேர்தல் பணிக்கு அதிக பணியாளர்கள் தேவைப்படுவார்கள். கடந்த முறை பயன்படுத்தப்பட்ட பணியாளர்களை மட்டுமே வைத்து இந்த முறை தேர்தலை நடத்த முடியாது. கொரோனா சூழலில் சமூக இடைவெளி உள்ளிட்டவற்றையும் வாக்குப்பதிவு மையங்களில் பின்பற்ற வேண்டியுள்ளது. எனவே கடந்த முறையை காட்டிலும் இந்த முறை சுமார் 50 சதவீதம் அளவிற்கு பணியாளர்கள் தேவைப்படுவார்கள்.

அதே சமயம் தேர்தலை இரண்டு கட்டங்களாக பிரித்து நடத்தினால் முதல் கட்டத்தில் தேர்தல் பணியாற்றியவர்களை வைத்தே இரண்டாவது கட்டத்தையும் நடத்திவிடலாம். கூடுதலாக பணியாளர்கள் தேவைப்படமாட்டார்கள். அதோடு கொரோனா சூழலில் தமிழகம் மட்டும் அல்ல எந்த மாநிலத்திலும் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவது கடினம் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. கொரோனா வழிமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளதால் தேர்தல் பணிகளையே கடந்த முறையை போல் முழு வீச்சாக செய்ய முடியாது என்கிறார்கள். கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியுள்ளதால் கடந்த முறையை காட்டிலும் தேர்தல் பணிகளில் நிதானம் அதிகம் கடைபிடிக்கப்படும்.

இவற்றை எல்லாம் கருததில் கொண்டே தமிழகத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அதோடு மட்டும் அல்லாமல் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக எப்போதுமே எந்த மாநிலத்திலும் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த விரும்புவதில்லை. பிரச்சாரங்களுக்கு வசதியாகவும், தேர்தல் வியூகங்களுக்காகவும் எந்த ஒரு மாநித்திலும் ஒரு கட்டத்திற்கும் அதிகமான தேர்தலையே பாஜக விரும்பும். அந்த வகையில் தமிழகத்திலும் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்த பாஜக விரும்புவதாக சொல்கிறார்கள். இரண்டு கட்டங்கள் என்றால் தமிழகத்தில் வியூகம் வகுப்பது எளிது மற்றும் பிரச்சாரத்திலும் அதிக கவனம் செலுத்தலாம் என்று பாஜக கருதுகிறது.

இப்படி சில விஷயங்களை எல்லாம் கருத்தில் கொண்டே தமிழகத்தில் இந்த முறை இரண்டு  கட்ட தேர்தலுக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்போனால் இதற்கான முடிவு எட்டப்பட்டுவிட்டதாகவும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போது இது குறித்து விரிவான தகவல்கள் வெளியாகும் என்கிறார்கள்.

click me!