
இரட்டை இலை சின்னத்தை அம்மா அதிமுக கட்சியின் அதிகாரபூர்வ வலைத்தளங்களில் தொடர்ந்து பயன்டுத்துவதை நிறுத்தி கொள்ளவேண்டும் என்று டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் இதுதொடர்பாக வரும் 6 -ம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதையடுத்து சசிகலா அணி, ஓ.பி எஸ் அணி என்ற இரு அதிமுக அணிகளும் தனித்தனி சின்னம், பெயர்களில் நிற்கின்றன.
இந்நிலையில் ஓ.பி எஸ் அணியின் வேட்பாளர் மதுசூதனன் தங்களுக்கு கொடுத்த இரட்டை மின்கம்பத்தை இரட்டை இலைச்சின்னம் போல் பயன்படுத்துவதாக தினகரன் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் தினகரன் கொடுத்த புகாருக்கு மதுசூதனன், நேற்று தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்தார்.
அப்போது தினகரன் இரட்டை இலை சின்னத்தையும், கட்சி பெயரையும் தவறாக பயன்படுத்துவதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தார் மதுசூதனன். இந்நிலையில் இதற்கு உரிய விளக்கம் அளிக்குமாறு தினகரனுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது,
"வருகிற 12 ம் தேதி நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் உங்கள் அணிக்கு தேர்தல் கமிஷன் அ.தி.மு.க. அம்மா என்ற பெயரையும், தொப்பி சின்னத்தையும் வழங்கியுள்ள நிலையில் உங்கள் அணியின் அதிகாரபூர்வமான வலைத்தளம், முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் இரட்டை இலை சின்னத்தை நீங்கள் பயன்படுத்துவது பற்றி எங்கள் கவனத்துக்கு வந்து உள்ளது.
கடந்த மார்ச் 22ஆம் தேதி தேர்தல் கமிஷன் வெளியிட்ட உத்தரவின்படி, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு உள்ளது. தேர்தல் கமிஷன் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கும் வரை அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இந்த சின்னத்தை தங்களின் வலைத்தளம், முகநூல், டுவிட்டர் பக்கங்களில் பயன்படுத்துவது தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ள உத்தரவை மீறும் செயலாக கருதப்படும்.
தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் ஊழல் தொடர்பான செயல்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் ஆகும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் அடிப்படையில் வாக்காளர்களுக்கு தவறான தகவல்களை தருதல் அல்லது வாக்காளர்களை குழப்பும் வகையில் தகவல்களை அளித்தல் ஊழல் தொடர்பான செயலாக கருதப்படுகிறது.
எனவே, உங்கள் அணியின் பிரசாரங்களிலோ அல்லது உங்கள் வலைத்தளம், முகநூல், டுவிட்டர் பக்கங்களிலோ இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிடுகிறது.
இந்த அத்துமீறல் தொடர்பாக தேர்தல் கமிஷன் மேலும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, சின்னங்கள் பற்றிய தேர்தல் கமிஷனின் உத்தரவு மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக உங்கள் தரப்பு விளக்கத்தை கேட்க ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இது குறித்து உங்களுடைய பதிலை வருகிற 6ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்படுகிறது".
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.