
வேட்பாளர்களுடன் அனுமதி பெற்ற நபர்களை விட அதிகமானோர் பிரசாரத்திற்கு சென்றால், அதன்பிறகு பிரசாரம் செய்ய அனுமதி கிடையாது என்ற புதிய அதிரடியான கட்டுப்பாட்டை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடக்க இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு, வரும் 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. வேட்புமனு தாக்கல் முடிந்து பிரசாரம் தொடங்கிவிட்டது.
இந்த முறை பணப்பட்டுவாடாவைத் தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. வெளி மாவட்ட வாகனங்களுக்கு தடை, மாலை 5 மணிக்கு மேல் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யக்கூடாது போன்ற அதிரடியான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
தேர்தல் விதிமுறைகள், பிரசார வழிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து வேட்பாளர்களுக்கும் முகவர்களுக்கும் விளக்கும் ஆலோசனைக்கூட்டம் தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமி, பொதுப்பார்வையாளர், செலவினப்பார்வையாளர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
வேட்பாளர்களுக்கும், முகவர்களுக்கும் தேர்தல் விதிமுறைகள், பிரசார வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
இந்த முறை பணப்பட்டுவாடாவைத் தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் தேர்தல் ஆணையம், பரப்புரை தொடர்பான புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. அதன்படி, பரப்புரைக்கு வேட்பாளருடன் செல்லும் நபர்கள் எத்தனை பேர் என்பதை முன்கூட்டியே தெரிவித்து அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்ற நபர்களுக்கு அதிகமானோர் வேட்பாளருடன் சென்றால், அதன்பிறகு பிரசாரம் செய்ய அனுமதி கிடையாது என்ற புதிய கட்டுப்பாட்டை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.