தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குது... தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் ஜரூர்..!

By Asianet TamilFirst Published Sep 12, 2020, 8:37 AM IST
Highlights

கொரோனா பீதி நீடிக்கும் நிலையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தும் பணிகளை  தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடியாத நிலையில், வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பீகார் மாநிலத்தில் தேர்தல், நாடு முழுவதும் இடைத்தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் என வரிசையாக தேர்தல்கள் காத்திருக்கின்றன. இதையொட்டி அண்மையில் கொரோனா காலத்தில் தேர்தல் நடத்தும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. 
அதன்படி கொரோனா காலத்தில் வாக்காளர்களும் தேர்தல் அதிகாரிகளும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பல பட்டியலிடப்பட்டன. அதில், ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிப்போர் எண்ணிக்கையைக் குறைப்பதும் ஒன்றாகும். வாக்குச்சாவடியில் இந்த எண்ணிக்கையைக் குறைக்கும்பட்சத்தில் வாக்குச்சாவடி எண்ணிக்கைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு புதிதாக எத்தனை வாக்குச்சாவடிகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் என்பதை மதிப்பீடு செய்யும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


மேலும் தற்போதுள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்க இட வசதி இருக்கிறதா, ஒரு வேளை இடவசதி இல்லை என்றால், அருகே எங்கு இட வசதி உள்ளது போன்ற விவரங்களைச் சேகரித்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல கூடுதல் வாக்குச்சாவடிகளுக்கு கூடுதலாக எத்தனை வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை, கூடுதலாக எவ்வளவு பணியாளர்கள் தேவை என்பதையும் தயார் செய்து வைக்கும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே புதிய வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், கொரோனா அச்சுறுத்தல் நீடித்தாலும் தேர்தல் நடைபெறும் என்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் பணிகளை ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.

click me!