பல தவறுகளுடன் ,கருத்து திணிப்பாக மாறும் கருத்து கணிப்புகள், தடை செய்யுமா தேர்தல் ஆணையம்?

By Asianet TamilFirst Published Mar 31, 2021, 5:39 PM IST
Highlights

தேர்தல் சமயங்களில் நடத்தப்படும் கருத்து கணிப்புகள் உண்மை நிலையை தெரிவிக்கவில்லை என்று கடந்த கால கருத்து கணிப்புகள் நமக்கு உணர்த்தியுள்ளன. இதற்கான காரணங்களாக கருத்து கணிப்பில் பங்கெடுக்கும் மக்களின் எண்ணிக்கை, இடம், நேரம் ஆகியவை கூறப்படுகிறது.  தமிழகத்தில் தற்போது நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளும் கள எதார்த்தத்தை வெளிப்படுத்தவில்லை என்று புள்ளியியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

தேர்தல் சமயங்களில் நடத்தப்படும் கருத்து கணிப்புகள் உண்மை நிலையை தெரிவிக்கவில்லை என்று கடந்த கால கருத்து கணிப்புகள் நமக்கு உணர்த்தியுள்ளன. இதற்கான காரணங்களாக கருத்து கணிப்பில் பங்கெடுக்கும் மக்களின் எண்ணிக்கை, இடம், நேரம் ஆகியவை கூறப்படுகிறது.  தமிழகத்தில் தற்போது நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளும் கள எதார்த்தத்தை வெளிப்படுத்தவில்லை என்று புள்ளியியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

நாடாளுமன்ற தேர்தலோ, சட்ட மன்ற தேர்தலோ டி.வி மீடியாக்கள் கருத்து கணிப்புகளை வெளியிடுவது  சம்பரதாயம் ஆகிவிட்டது. டி.விக்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு தனியார் அமைப்புகளும் கருத்து கணிப்பு என்ற போர்வையில் தங்களது கணிப்புகளை ஒரு சாரருக்கு சாதமாக வெளியிட்டு வருவது தொடர்ந்து வருகிறது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பல்வேறு தரப்பினரும் வெளியிடும் இந்த கருத்து கணிப்புகள் விஞ்ஞான பூர்வமாக கணிக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தமிழகத்தில் 6 கோடியே 26 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் எண்ண ஓட்டத்தை கணிக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சமாக 10 லட்சம் வாக்காளர்களிடம் கருத்து கணிப்புகளை நடத்த வேண்டும். தற்போது வெளிவந்துள்ள கருத்து கணிப்புகள் 5000 வாக்காளர்கள் முதல் 70 ஆயிரம் வாக்காளர்களிடம் மட்டுமே கேட்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் துல்லியமாக இருக்காது என்றும் 10% வாக்காளர்களிடம் நடத்த வேண்டிய கருத்து கணிப்புகள் 1% குறைவான வாக்காளர்களிடம் மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாக புள்ளியியல் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதே போல் கருத்து கணிப்புகள் நடத்த வேண்டிய கால கட்டமும் முக்கியம் என்றும் புள்ளியியல் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். தற்போது நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்து கணிப்புகள் மார்ச் மாதத்திற்கு முன் நடத்தப்பட்டுள்ளது. மார்ச் மாதம் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. மக்களிடையே இதன் தாக்கங்கள் என்ன என்பதை கணிக்க இந்த கருத்து கணிப்புகள் தவறிவிட்டதாகவும் புள்ளியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் தலைவர்களின் பிரச்சாரம் காரணமாக அடிக்கடி மாறி வரும் களச்சூழலை கருத்தில் கொண்டு கருத்து கணிப்புகள் தொடந்து நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காரணங்கள் அனைத்தும் தற்போது வெளியிடப்பட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகள் கள எதார்த்தத்தை வெளிப்படுத்தவில்லை என்றே புள்ளியியல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

இதற்கு சான்றாக 2011 மற்றும் 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் நக்கீரன் பத்திரிக்கை அதிமுக கூட்டணி அதிகபட்சமாக 80 இடங்களையும், ஹெட்லைன்ஸ் டுடே டி.வி 164 இடங்களை அதிமுக கூட்டணி பெறும் என்றும் தெரிவித்தது. மாறாக அதிமுக கூட்டணி 203 இடங்களில் வெற்றி பெற்று அனைத்து கருத்து கணிப்புகளையும் பொய்யாக்கியது. 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் திமுக கூட்டணி 141 இடங்களில் வெற்றி பெறும் என்று நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியும், 133 இடங்களை பெறும் என்று நக்கீரன் பத்திரிக்கையும் கருத்து கணிப்புகளை வெளியிட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இந்த கருத்து கணிப்புகளை தவிடுபொடியாக்கியது. அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. 

கருத்து கணிப்பு முடிவுகள் உண்மையான நிலவரத்தை என்றும் பிரதிபலிக்கவில்லை, அதற்கான காரணங்களாக அனைத்து தரப்பு மக்களையும் கருத்து கணிப்பு நடத்தும் நிறுவனங்கள் அணுகுவதில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. உண்மையான கள நிலவரத்தை வெளிப்படுத்தாத கருத்து கணிப்பு முடிவுகளை மக்கள் புறந்தள்ளும் நேரம் வந்துவிட்டதாகவும் இது போன்ற கருத்து கணிப்புகளை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகிறது.

click me!