மம்தாவுக்கு அடுத்த தலைவலி... கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

By Asianet TamilFirst Published Jul 19, 2019, 6:36 AM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற இரு தொகுதிகளும் தமிழகத்திலிருந்து கிடைத்தவை. 

நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய அளவில் சோபிக்காத திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய அந்தஸ்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
 நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற இரு தொகுதிகளும் தமிழகத்திலிருந்து கிடைத்தவை. கட்சிகள் தங்களுடைய அங்கீகாரத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்.
அந்த அடிப்படையில் தேசிய கட்சிகள் என்றால், நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சமாக 6 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.  நாடாளுமன்றத்தில் குறைந்தபட்சம் 4 எம்பிக்களை வைத்திருக்க வேண்டும். ஆனால், இக்கட்சிகள் தேர்தலில் இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை. இதையடுத்து இக்கட்சிகளின் தேர்தல் அங்கீகாரத்துக்கு சிக்கல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டுவந்தது.


இந்நிலையில்  திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ‘தங்கள் கட்சியின் தேசிய அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது’ எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸூக்கு ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் பதிலளிக்கவும் இக்கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல உத்தரப்பிரதேசத்தில் குறைந்த அளவே வெற்றி பெற்ற சமாஜ்வாடி கட்சிக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!