தமிழகத்தில் செப்டம்பர் 7 வரை இடைத்தேர்தல் இல்லை..திடீரென அறிவித்த தேர்தல் ஆணையம்..அதன்பிறகு மட்டும் நடக்குமா?

By Asianet TamilFirst Published Jul 23, 2020, 8:31 PM IST
Highlights

தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் செப்டம்பர் 7 வரை நடத்த வாய்ப்பில்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி பிப்ரவரி 27ம் தேதியும், குடியாத்தம் தொகுதி உறுப்பினர் காத்தவராயன் பிப்ரவரி 28-ம்  தேதியும் அடுத்தடுத்து உடல்நல குறைவால் காலமானார்கள். தேர்தல் ஆணைய விதிமுறைப்படி இந்த இரு தொகுதிகளிலும் ஆகஸ்ட் 28-ம்  தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். ஆனால், கொரோனா பாதிப்பால் இந்தத் தொகுதிகளில்  தேர்தல் பற்றிய நிலைப்பாட்டை தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் இருந்தது. இந்த இரு தொகுதிகளோடு சேர்த்து அண்மையில் காலியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வாக்குப்பெட்டி இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக தமிழக  தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘கொரோனா பேரிடராலும் சில மாநிலங்களில் மழை வெள்ள பாதிப்பாலும் இடை தேர்தல் நடத்த இயலாத சூழல் உள்ளது. எல்லா மாநிலங்களும் கொரோனா நோய் தடுப்பு பணியில் உள்ளதால், தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. எனவே, தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகள் உள்பட பல மாநிலங்களிலும் செப்டம்பர் 7 வரை இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை’ என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


செப்டம்பர் 7 வரை தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்தாலும்கூட, அதன்பிறகு 6 மாதங்களில் சட்டப்பேரவையின் காலமே முடிவடைகிறது. எனவே அதன்பிறகும் இடைத்தேர்தல் தமிழகத்தில் நடப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. 

click me!