தேர்தல் ஆணையத்திடம் தொக்காக மாட்டிய உதய்.. இன்று மாலைக்குள் விளக்கமளிக்க கெடு. பதற்றத்தில் திமுக.

By Ezhilarasan BabuFirst Published Apr 7, 2021, 10:33 AM IST
Highlights

இதற்கு உதயநிதி ஸ்டாலின் மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.  

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோரின் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. 

 திட்டமிட்டபடி, ஒரே கட்டமாக தமிழகம், புதுவை, கேரளா ஆகிய மூன்று  மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. முன்னதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், திமுக-அதிமுக  மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன. இரு கூட்டணி கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறிவந்த நிலையில், தாராபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண்ஜெட்லி ஆகியோர் பிரதமர் மோடி கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே உயிரிழக்க நேரிட்டது என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். 

அவரின் இந்தப் பேச்சு குறித்து சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண்ஜேட்லி ஆகியோரின் மகள்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் மறைந்த தலைவர்கள் குறித்து இப்படி தவறாக பேசுவது சரியல்ல, உடனே இதற்கு உதயநிதி ஸ்டாலின் மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஏப்ரல் 2ஆம் தேதி பாஜக அந்த புகாரை கொடுத்தது.  இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் வரும் 7ஆம் தேதி அதாவது இன்று மாலை 5 மணிக்குள் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளிக்க கெடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!