
இரட்டை லை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு விசாரணையில், டி.டி.வி.தினகரன் தரப்பு வாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்று 7 ஆவது கட்ட விசாரணை நடைபெறவுள்ளது.
அதிமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் மிக முக்கிய விவகாரமாக, இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்ற கேள்வி, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் தொடங்கி அடிமட்டத் தொண்டர்கள் வரையில் பரபரத்துக் கிடக்கிறது. இதுதொடர்பாக, டெல்லி தேர்தல் ஆணையத்தில், விசாரணை நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு முறையும், சசிகலா மற்றும் தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள், பல்வேறு விபரங்களைக் கூறி, விசாரணை நேரம் முழுவதையும் ஆக்கிரமித்தனர். தினகரன் தரப்பு வழக்கறிஞர், விஜய் ஹன்சாரியா, தன் வாதங்களை நிறைவு செய்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினமும் தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையிலும், நேரமாகிவிட்டதாக கூறி, தேர்தல் அதிகாரிகள் இன்று விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.
இதையடுத்து, இன்று மாலை, 4:00 மணிக்கு, 7 ஆவது கட்டமாக மீண்டும் விசாரணை நடக்கவுள்ளது. நவம்பர் 10 ஆம் தேதிக்குள் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்றாவது விசாரணையை ஒத்தி வைக்காமல் தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்குமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.