கர்நாடகா தேர்தலுக்கும் காவிரி விவகாரத்திற்கும் சம்மந்தமில்லை.. மத்திய அரசுக்கு செக் வைத்த தேர்தல் ஆணையம்

First Published Mar 27, 2018, 11:47 AM IST
Highlights
election commission cleared about cauvery management board forming


கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தாலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை என தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம் நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது. மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை தீர்ப்பில் குறிப்பிடப்படாததால், அதை சுட்டிக்காட்டி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குகிறது என தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேநேரத்தில், எந்தவித அதிகாரமுமில்லாத மேற்பார்வை ஆணையத்தை அமைக்காமல், அதிகாரமிக்க மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் மத்திய அரசை அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் வலியுறுத்துகின்றன. 

இதற்கிடையே இன்று, கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அதை காரணம் காட்டி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்த வாய்ப்புள்ளதாக விவசாயிகள் அஞ்சினர்.

ஆனால், கர்நாடகாவில் அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிகள், காவிரி விவகாரத்திற்கு பொருந்தாது. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தடையில்லை என தலைமை தேர்தல் ஆணையர் பிரகாஷ் ராவத் தெரிவித்தார்.

இதன்மூலம், கர்நாடக சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி, மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசால் காலம் தாழ்த்த முடியாது.
 

click me!