
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்களுக்கு நிதி வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:
உழைப்போர் திருநாளாம் மே தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்க பேரவை உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்பநல நிதி உதவி வழங்கும் திட்டம் ஜெயலலிதா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும், போக்குவரத்து கழகம் அண்ணா தொழிற்சாலைகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் குடும்பநல உதவி வழங்கப்படும்.
ஆனால், தவிர்க்க முடியாத பல்வேறு காரணங்களால் 2020ஆம் ஆண்டு வழங்கவேண்டிய அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்களுக்கான நிதி உதவியும், இந்த ஆண்டு வழங்க வேண்டிய நலிந்த தொழிலாளர்களுக்கான நிதி உதவியும், தற்போது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் நிதி உதவி வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். என அதில் கூறப்பட்டுள்ளது.