பொதுப்பணித்துறை யாருக்கு? துரைமுருகன் VS எ.வ. வேலு VS ராணிப்பேட்டை காந்தி..! திமுக சடுகுடு..!

By Selva KathirFirst Published May 1, 2021, 2:29 PM IST
Highlights

எ.வ.வேலு எப்படியாவது பொதுப்பணித்துறை அமைச்சராகிவிட துடித்துக் கொண்டிருக்கிறார்கள். திமுகவின் பொருளாதாரம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் தனி ஆளாக எ.வ.வேலு தான் கவனித்துக் கொண்டிருக்கிறார். தவிர கட்சியின் பொருளாளர் பதவியை எப்படியும் பெற்றுவிட காய் நகர்த்திய எ.வ.வேலுவுக்கு அந்த பதவி கிடைக்கவில்லை. இதே போல் திமுகவின் தலைமை நிலையச் செயலாளர் பதவி மீதும் எ.வ. வேலுவுக்கு விருப்பம் இருந்தது.

திமுக ஆட்சிக்கு வந்தால் பொதுப்பணித்துறை அமைச்சர் யார் என்பதில் மூன்று பேருக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது.

வேலூர் மாவட்டத்திற்குள் இருந்த வரை ராணிப்பேட்டை காந்தியால் எம்எல்ஏ பதவியை தாண்டி எதையும் பெற முடியாத நிலை இருந்தது. ஆனால் ராணிப்பேட்டை மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு அமைச்சராகும் யோகம் அடித்துள்ளது. திமுகவை பொறுத்தவரை மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர்கள் என்கிற கொள்கையின் அடிப்படையில் ராணிப்பேட்டைக்கும் கண்டிப்பாக ஒரு அமைச்சர் பதவி ஒதுக்கப்படும். அந்த வகையில் திமுக வெற்றி பெற்றால் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் என்கிற வகையில் காந்திக்கு அமைச்சர் பதவி கன்பார்ம்.

இதே போல் வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அமைச்சருக்கான கோட்டா கண்டிப்பாக துரைமுருகனுக்கு மட்டுமே. காட்பாடியல் அவரை எதிர்த்து போட்டியிட யாருமே விருப்ப மனு தாக்கல் செய்யாத நிலையில் அமைச்சர் பதவிக்கு மட்டும் யார் போட்டிக்கு வந்துவிடப்போகிறார்கள். எனவே திமுக வெற்றி பெற்றால் துரைமுருகனும் அமைச்சராவது உறுதி. இதே போல் திமுக தலைமைக்கு மிகவும் நெருக்கமாக இருந்தும் கட்சியில் உயர் பதவியை அடைய முடியாத விரக்தியில் உள்ள எ.வ.வேலு ஏற்கனவே அமைச்சராக இருந்தவர். எனவே திருவண்ணாமலை மாவட்ட கோட்டாவில் எ.வ.வேலு அமைச்சராகிறார்.

இப்படி இந்த மூன்று பேருக்கும் அமைச்சர் பதவி உறுதியானாலும் இலாக்கா விஷயத்தில் மூன்று பேரும் மோதிக் கொள்கிறார்கள். துரைமுருகனை பொறுத்தவரை கடந்த முறை திமுக ஆட்சியின் ஆரம்ப கால கட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். ஆனால் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் அழகிரி தரப்புடன் துரைமுருகன் மோதல் போக்கை கடைபிடித்ததாக கூறுகிறார்கள். இதனால் அவரிடம் இருந்து பொதுப்பணித்துறையை பறித்து கலைஞர் தன் வசம் வைத்துக் கொண்டு துரைமுருகனை சட்டத்துறை அமைச்சராக நியமித்தார். இதனால் துரைமுருகன் அதிருப்தியில் இருந்தாலும் தற்போது ஸ்டாலினுக்கு மிக மிக நெருக்கமாகிவிட்டார். எனவே உரிமையுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியை துரைமுருகன் கோருகிறார்.

இதே போல் ராணிப்பேட்டை காந்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமுகன் சபரீசனுக்கு மிகவும் நெருக்கம். கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதியுடனும் காந்தி நெருக்கம் காட்டி வருகிறார். அந்த வகையில் காந்திக்கும் பொதுப்பணித்துறை மீது ஒரு கண் உள்ளது. அமைச்சரவை விவகாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் நபர் ஒருவரும் காந்தி மீது நம்பிக்கை கொண்டவர். எனவே திமுக ஆட்சி அமையும் பட்சத்தில் மிக மிக முக்கிய இலாக்காவாக கருதப்படும் பொதுப்பணித்துறை காந்திக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். துரைமுருகனை பொறுத்தவரை கடந்த முறையை போல் சட்டத்துறை அல்லது நிதித்துறை என்று சொல்லப்படுகிறது.

எ.வ.வேலு எப்படியாவது பொதுப்பணித்துறை அமைச்சராகிவிட துடித்துக் கொண்டிருக்கிறார்கள். திமுகவின் பொருளாதாரம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் தனி ஆளாக எ.வ.வேலு தான் கவனித்துக் கொண்டிருக்கிறார். தவிர கட்சியின் பொருளாளர் பதவியை எப்படியும் பெற்றுவிட காய் நகர்த்திய எ.வ.வேலுவுக்கு அந்த பதவி கிடைக்கவில்லை. இதே போல் திமுகவின் தலைமை நிலையச் செயலாளர் பதவி மீதும் எ.வ. வேலுவுக்கு விருப்பம் இருந்தது. ஆனால் அந்த பதவியும் கே.என்.நேருவுக்கு சென்றுவிட்டது. எனவே இந்த விஷயங்களையும் எல்லாம் எடுத்துக்கூறி எப்படியும் பொதுப்பணித்துறையை பெற்றுவிடலாம் என்று எ.வ.வேலு லாபி செய்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

ஆனால் பொதுப்பணித்துறை உள்ளிட்ட முக்கிய இலாக்காக்கள் நிச்சயமாக சீனியர்களுக்கு வழங்கப்படாது என்றும் புதுமுகத்திற்கே அந்த இலாக்கா என்கிறார்கள். எனவே திமுக ஆட்சி அமைந்தால் ராணிப்பேட்டை காந்திக்கு தான் பொதுப்பணித்துறை அமைச்சராகும் வாய்ப்பு என்று பேச்சு அடிபடுகிறது.

click me!