
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து… அதிர்ச்சியில் சசிகலா அணி…120 கோடி ரூபாய் அம்போ…
சென்னை ஆர்.கே.நகரில் நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள சசிகலா தரப்பினர் தாங்கள் செலவு செய்த 120 கோடி ரூபாய் வீணாகிவிட்டதாக புலம்பித் தவித்து வருகின்றனர்.
ஆர்.கே.வாக்குக்கு பணம் கொடுப்பதாக பரவலாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கும் சூழ்நிலையில் இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
சசிகலா அணி சார்பில் டி.டி.வி. தினகரன், ஒபிஎஸ் சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் பின்னணிப் பாடகர் கங்கை அமரன், தேமுதிக சார்பில் மதிவாணன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன் ஆகியோர் உள்பட 62 பேர் போட்டியிட்டனர்
.இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன.
இதையடுத்து அங்கு பறக்கும் படையினர் அதிரடிச் சோதனை நடத்தி பணப் பட்டுவாடாவை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆர்.கே.நகர் தேர்தலை நடத்துவதற்கான சிறப்பு அதிகாரியாக விக்ரம் பாத்ரா என்கிற புதிய அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.
இவர் ஆர்.கே.நகர் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து முறைகேடுகளைத் தடுக்க தீவிர ஆலோசனையும் நடத்தினார். பணப் பட்டுவாடா மற்றும் பரிசு பொருள்கள் விநியோகம் செய்வதைத் தடுக்க 70 நுண் பார்வையாளர்களும் பணி அமர்த்தப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நடிகர் சரத்குமார், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 35 இடங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது.
.இந்த நிலையில் ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த ஆவணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட சில அமைச்சர்கள் பெயரும் இடம் பெற்றிருந்தன.
சசிகலா அணி வேட்பாளர், டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு திரட்டுவதற்காக 89 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டதாக சோதனையில் தெரியவந்தது என வருமான வரித் துறையால், தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரியான விக்ரம் பத்ரா கடந்த சனிக்கிழமை டெல்லி புறப்பட்டு சென்றார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடந்த பணப்பட்டுவாடா மற்றும் தொகுதியில் நிலவும் அசாதாரண சூழல் பற்றி அவர் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்ததாகக் கூறப்பட்டது.
இதற்கிடையே தமிழக தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானியிடமும் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டது. இதனை ஏற்று ராஜேஷ் லக்கானி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். விக்ரம் பத்ரா, ராஜேஷ் லக்கானி இருவரும் தேர்தல் ஆணையத்தில் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.
அப்போது ஆர்.கே.நகர் தேர்தலை ஒத்திவைத்து விட்டு வேறு ஒருநாளில் தேர்தலை நடத்தலாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அதில் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆதாரங்கள் வருமான வரி ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு முன் தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் இதே போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. முறைகேடுகளை தவிர்க்க எடுக்கப்படும் முயற்சிகள் நூதன முறையில் மீறப்பட்டுள்ளன.
அரசியல் சட்டத்தின் 324 வது பிரிவின் கீழ் ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 21இல் தேர்தலை ரத்து செய்வதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா தொடர்பாக இதுவரை மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் 7-ந்தேதி வரை ரூ.18,80,700 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொபைல் போன், வெள்ளித் தட்டு, புடவைகள் உள்ளிட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடா தொடர்பான புகாரில் பலர் பிடிப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் வந்த பிறகு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.