
மதுரையில் எட்டு மாத கர்ப்பிணியான சண்முகப்பிரியா என்ற மருத்துவர், கொரோனா தாக்கி இறந்த செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:
மதுரையில் எட்டு மாத கர்ப்பிணியான சண்முகப்பிரியா என்ற மருத்துவர், கொரோனா தாக்கி இறந்த செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது.
கடந்த ஓராண்டில், இவரைப்போன்ற மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், முன்களப் பணியாளர்கள் ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்து விட்டனர். தற்போது, நாடு முழுமையும் இலட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு, தொற்று பரவி வருகின்றது. மருத்துவமனைகளில் கடும் நெருக்கடி நிலவுகின்றது.
எனவே, வேறு வழி இன்றி, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு முடக்கம் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கின்றது. கொரோனாவைத் தடுப்பதற்காகத் தமிழக அரசு மேற்கொள்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்: சமூக விலகலைக் கடைப்பிடிப்போம்: வீட்டுக்கு உள்ளே இருக்கும்போதும் வாய்மூக்கு மூடி அணிந்திடுங்கள்,
கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து கொரோனா பரவலைத் தடுப்போம். சண்முகப்பிரியா மறைவால், வேதனையில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.