ஈழத்தமிழர் பிரச்சினை... ராகுலின் திடீர் தமிழர் பாசம்... வெளுக்கும் திமுக- காங்கிரஸ் நாடகம்..!

By Thiraviaraj RMFirst Published Jan 16, 2021, 4:55 PM IST
Highlights

 இலங்கைத் தமிழர் படுகொலையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசின் பங்கு எதுவும் இல்லை என்றும், அது இன்னொரு நாட்டுப் பிரச்சினை என்றும் காங்கிரஸ்காரர்கள் கூறிவருகின்றனர். 

தமிழர் பண்பாட்டின் மீது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு திடீரென்று பாசம் வந்ததால், அவர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நேரடியாக வந்து பார்த்தார். அது மட்டுமில்லாமல் தமிழ் பண்பாடு இந்தியப் பண்பாட்டின் முக்கிய அங்கம் என்றும், அது பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பேசியுள்ளார். இது 2011-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதையும் நினைவுபடுத்தியது.

அதே நேரத்தில், இலங்கையில் தமிழர் இனப்படுகொலையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியின் பங்கை அம்பலப்படுத்தும் விதமாக, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதியுள்ள ஆங்கில புத்தகமும் இப்போதுதான் வெளிவந்துள்ளது. அதில், இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் காங்கிரஸ்-திமுக அரசு செயல்பட்டதையும், இதுகுறித்து திமுக தலைவர் மு.கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தியதையும் பிரணாப் முகர்ஜி வெளிப்படுத்தியுள்ளார். இந்த புத்தகம் தமிழில் வெளிவந்துவிடாமல் காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர்கள் கடும் முயற்சி எடுத்து வருவதாகத் தகவல்களும் வெளிவந்துள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடப்பதற்கு இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தின்மீது தேசியத் தலைவர்களின் பார்வை திரும்பியுள்ளது. காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்தபோது, தமிழர் பண்பாடு பற்றியோ, தமிழர்களைப் பற்றியோ, கவலைப்படாத முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தற்போது தொடர்ந்து இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து, எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தபின், தமிழர்கள் மீது மிகுந்த அக்கறையையும் அன்பையும் பொழியத் தொடங்கியுள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆண்டபோதுதான் ஜல்லிக்கட்டு என்று அழைக்கப்படும் தமிழர்களின் வீர விளையாட்டான ஏறு தழுவுதல் என்பது காளைகளை சித்ரவதை செய்வது என்று கூறப்பட்டு தடை செய்யப்பட்டது. பின்னர், பாஜக ஆட்சிக்காலத்தில் அந்தத் தடை நடைமுறைக்கு வந்தது.

அப்போது, அது குறித்தெல்லாம் என்னவென்று அறியாத ராகுல்காந்தி, தற்போது ஜல்லிக்கட்டு தமிழர்களின் பண்பாடு என்பதை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் தெரிந்துகொண்டுள்ளார். “ஜல்லிக்கட்டு காளைகளைத் துன்புறுத்தக்கூடியது என்று எனக்கு முதலில் சொல்லப்பட்டது. அதை நான் நேரில் பார்த்தபோது அதில் எந்தத் துன்புறுத்தலும் இல்லை என்று அறிந்துகொண்டேன். தமிழர் பண்பாட்டை அழிக்க முயற்சிகள் நடைபெறுகிறது. தமிழர் பண்பாடு மதிக்கப்பட வேண்டும்”என்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியும் அளித்துள்ளார்.

தமிழர்கள் மீது ராகுல்காந்தி காட்டியுள்ள திடீர் பாசம் காங்கிரஸ் ஆதரவாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அதே நேரத்தில், ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று தெரியாமலே ராகுல்காந்தி அதைத் தடைச் செய்ய ஒப்புக்கொண்டாரா என்ற கேள்வியையும் பலர் எழுப்பியுள்ளனர். இப்படி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ராகுலுக்குத் தெரியாமல், அவருக்கு உண்மை புரியாமல் என்னவெல்லாம் நடந்ததோ என்று பொதுமக்கள் பேசத்தொடங்கியுள்ளனர். இலங்கைத் தமிழர் படுகொலை குறித்து ராகுல்காந்திக்கு சரியாக சொல்லப்பட்டதா அல்லது அதிலும் ராகுல் எதுவும் தெரியாமல் இருந்தாரா என்று தமிழின உணர்வாளர்கள் கேட்கத்தொடங்கியுள்ளனர்.

ஆனால், இலங்கைத் தமிழர் படுகொலையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசின் பங்கு எதுவும் இல்லை என்றும், அது இன்னொரு நாட்டுப் பிரச்சினை என்றும் காங்கிரஸ்காரர்கள் கூறிவருகின்றனர். ஆனால், ஈழத்தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் சாயத்தை வெளுக்கும்வகையில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் அப்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவருமான பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தகம் அண்மையில் வெளிவந்துள்ளது. அதில், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் இணைந்து தமிழர் இனப்படுகொலையை எப்படித் திட்டமிட்டோம் என்பதையும், அதை முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் எப்படி விவாதித்தோம் என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.

அவரது புத்தகத்தில் தமிழ் ஈழம் என்பது ‘இலங்கையின் வடபகுதியையும், இந்தியாவின் தென்பகுதியான தமிழ்நாட்டையும் உள்ளடக்கிய தனிநாடு அமைக்கும் திட்டம்’ என்று முதலில் இருந்ததாகவும், பின்னர் அதில் இலங்கையின் வடபகுதி மட்டும் என்று மாற்றப்பட்டதாகவும் கூறுகிறார். தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளான அதிமுகவும், திமுகவும், விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்ததாகவும், அதை இந்திய அரசு ஊக்குவித்ததாகவும் அவர் எழுதியுள்ளார்.

தான் வெளியுறவுத்துறை அமைச்சரான பிறகு 1995-ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நாடுகடத்தி, இந்திய அரசிடம் ஒப்படைக்குமாறு அப்போதைய இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவிடம் தான் கேட்டதாகவும் அவர் எழுதியுள்ளார். 2004-ஆம் ஆண்டு காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு மத்தியில் ஏற்பட்டபோது, இலங்கையில் சிங்கள அரசின் போர் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு முழு ஆதரவு அளித்ததை பிரணாப் முகர்ஜி போட்டு உடைத்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்குத் தனிநாடு அமையக்கூடாது என்றும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியுடன் இலங்கை முன்னாள் அதிபர் ஜெயவர்த்தனே செய்துகொண்ட ஒப்பந்தப்படி, 13-வது சட்டப்பிரிவுதான் நிறைவேற்றப்பட வேண்டும் என்று மகிந்த ராஜபக்சேவுடன் பேசியதையும் அதுபற்றி கருணாநிதியுடன் விளக்கியதையும் பிரணாப் முகர்ஜி எழுதியுள்ளார்.

click me!