
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க கூட்டணியில் உள்ள த.மா.கா வேட்பாளர் நடராஜனை ஆதரித்து, ஒரத்தநாட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில் வேனில் நின்றுகொண்டு பிரசாரம் செய்து கொண்டிருந்தார்ப. அவருடன் வைத்திலிங்கம் எம்.பி, வேட்பாளர் நடராஜன் ஆகியோர் நின்றிருந்தனர்.
எடப்பாடி பேசத் தொடங்கிய சில நிமிடங்களில், வேனின் பக்கவாட்டில் இருந்து செருப்பு ஒன்று எடப்பாடி பழனிசாமியை நோக்கி வீசப்பட்டது. ஆனால் அந்த செருப்பு, அவர் மீது படாமல் வைத்திலிங்கத்தின் கையில்பட்டு,அவருக்கு அருகில் வேன் மேலேயே விழுந்தது.
இதில் அதிர்சியடைந்த வைத்திலிங்கம், செருப்பு வந்த பக்கம் கோபமாகத் திரும்பிப் பார்த்தார். பின்னர், முதலமைச்சருக்கு தெரியாத வகையில் செருப்பை மறைக்கும் விதமாகக் கையை வைத்துக் கொண்டு நின்றார்.
இதற்கிடையில், செருப்பு வீசியவரை அதிமுகவினரே பிடித்துவிட்டனர். பின்னர், 10 நிமிடத்தில் பேச்சை முடித்துக்கொண்டு எடப்பாடி புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு, செருப்பு வீசிய நபரை அதிமுகவினர் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதைக் கண்ட போலீஸார் அவரை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். செருப்பு வீசியவர், உப்புண்டார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் எனத் தெரியவந்தது. கேட்டரிங் பட்டதாரியான இவர், அதிமுக கரை வேட்டி கட்டிக்கொண்டுதான் கூட்டத்திற்கு வந்திருக்கிறார்.
அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாகவே இருந்துள்ளார். அதைத் தொடர்ந்து, வேல்முருகன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
வேல்முருகன் அமமுகவைச் சேர்ந்தவர். வைத்திலிங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தவே இப்படிச் செய்திருக்கிறார் என அதிமுகவினர் கூறுகின்றனர்.ஆனால் அவர், அதிமுகவைச் சேர்ந்தவர்தான். அவர் அப்பா புண்ணியமூர்த்தி, அதிமுகவில் கிளைச் செயலாளராக இருந்தவர். சொந்தக் கட்சியில் உள்ளவரே செருப்பு வீசிவிட்டார் என்பதை மறைக்கவே, எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் எனப் பேசிவருகின்றனர் என தெரிவித்தனர்..
மேலும், கஜா புயல் பாதிக்கப்பட்டபோது உடப்பாடி பார்க்க வரவில்லை என்றும், உரிய நிவாரணம் வழங்கவில்லை எனவும் வேல் முருகன் வருத்தத்தில் இருந்திருக்கிறார். அந்தக் கோபத்திலேயே இப்படிச் செய்துள்ளார் என அமமுகவின் தெரிவித்தனர்.