தடைகளை தகர்த்தெறிந்து 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி... புகழ்ந்து தள்ளிய கூட்டணி கட்சிகள்..!

By vinoth kumarFirst Published Feb 16, 2020, 5:13 PM IST
Highlights

எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதலமைச்சராக பதவியேற்று 3 ஆண்டுகள் முடிவடைந்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற இந்த நேரத்தில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

தமிழக முதல்வராக 4-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதையொட்டி அதிமுக தலைமை கழகத்தில் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக கடந்த 10,11-ம் தேதிகளில் 2 நாட்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதனிடையே, இன்று தேனி, அரியலூர், தர்மபுரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த முதல்வர் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்துக்கு வந்தார். அவரது ஆட்சி 3 ஆண்டு நிறைவு பெற்று 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி அவருக்கு அதிமுக நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இனிப்புகளும் வழங்கினார்கள். கட்சி நிர்வாகிகளின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி பொங்க தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதனையடுத்து, விஜயகாந்த், ராமதாஸ் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த வெளியிட்டுள்ள அறிக்கையில்;- எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதலமைச்சராக பதவியேற்று 3 ஆண்டுகள் முடிவடைந்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற இந்த நேரத்தில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் ஓர் ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எல்லா விதங்களிலும் முன்னேற்றம் தரக்கூடிய அளவு நல்லாட்சி தர வேண்டும். நடந்து முடிந்த மூன்று ஆண்டுகாலம் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக தேமுதிக சார்பாக எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்.

அதேபோல், பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டர் பதிவில் ‘‘முதல்வர் பதவியில் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள். ஏழைகள், உழவர்கள், மாணவர்கள் நலனுக்காக மேலும் பல திட்டங்களை செயல்படுத்தி சாதனை தொடரவும் வாழ்த்துகிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

click me!