
ஏற்கனவே இரு அணிகளாக இருந்த அதிமுக, இணைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பித்ததும், மூன்று அணிகளாகி விட்டது.
பன்னீர் அணி, சசிகலா அணி என இரண்டு அணிகளையும் தாண்டி அமைச்சர்கள் அணி என்று புதிதாக ஒரு அணி உருவாகி விட்டது.
இந்நிலையில், அமைச்சர்கள் அணிக்கும், பன்னீர் அணிக்கும் இடையில்தான் தற்போது இணையும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
ஆட்சியின் எஞ்சிய நான்கு ஆண்டுகளும், தங்கள் பதவிக்கு ஆபத்து வந்துவிட கூடாது என்று விரும்பும் பெரும்பாலான அமைச்சர்களும், எம்.எல்.ஏ க்களும் இந்த அணியில்தான் உள்ளனர்.
தினகரனுக்கு நெருக்கமான ஒரு சில எம்.எல்.ஏ க்கள் மட்டுமே சசிகலா அணியில், அதாவது தினகரன் பக்கம் உள்ளனர்.
ஆனால், முதல்வர் எடப்பாடி எந்த அணியில் இருக்கிறார் என்பதை இதுவரை யாராலும் அறிய முடியவில்லை. பிரிந்த அணி இணைக்கப்பட்டால், தமது முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற அச்சம் அவருக்கு உள்ளது.
அதனால், முதல்வர் பதவியை தர விரும்பும் அணிக்கே அவர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள நிலையில், அதற்கு வாய்ப்பு மிக மிக குறைவாகவே உள்ளது.
அதே சமயம், கடந்த சில நாட்களாக, தினகரன் பல முறை அழைத்தும், எடப்பாடி அவரை சந்திக்காமல் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. அதன் பின்னணியில் என்ன அரசியல் ரகசியம் உள்ளது என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.