
ஜெயலலிதா மறைந்த முதல் நாளில் இருந்து சசிகலா குடும்பத்தினருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போதில் இருந்து தற்போது வரை, எதிர்ப்பு என்னும் நெருப்பு ஆற்றில் நீந்திதான் செல்கிறது சசிகலா குடும்பம்.
அதன் உச்சமாக, அவரை ஆதரித்த அவரது சமூகத்த சேர்ந்தவர்கள் உள்பட 90 சதவீதம் பேர் அந்த குடும்பத்தை எதிர்க்கின்றனர். ஆனாலும், இறுதிவரை விடமாட்டேன் என்ற பாணியில், தினகரன் எதிரிகளிடம் விடாமல் மோதிவருகிறார்.
வாள் போல் கத்தி வந்த கதையாக, ஓ.பி.எஸ்.போய் தற்போது எடப்பாடி வந்துள்ளார். ஓ.பி.எஸ்.சை ஒரு வழியாக சமாளித்த தினகரனுக்கு, நிச்சயம் எடப்பாடியை சமாளிப்பது என்பது கடினமான காரியம்தான்.
எடப்பாடி சத்தம் போடாமல், ஸ்கெட்ச் போட்டு உள்ளடி வேலைகளில் ஈடுபட்டதே இதற்கு காரணமாகும். சசிகலா குடும்பத்தினரின் குணாதிசயங்களை நன்கு உணர்ந்து இருந்த எடப்பாடி, பதவியேற்ற முதல் நாளில் இருந்தே ஆட்டத்தை தொடங்கி இருந்தார்.
கணகச்சிதமாக வேலுமணி, தங்கமணி, வீரமணி ஆகியோரை வைத்து கட்சியை கபளிகரம் செய்து தன் பக்கம் கொண்டு வந்துவிட்டார். இதுபுரியாத தினகரன் மற்றும் அவரது அணியினர் கட்சியினர் எங்களுடன் தான் இருக்கிறார்கள். ஒரு குழப்பமும் இல்லை என தொடர்ந்து பேசி வருகின்றனர்.
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் அரசியல் அட்டகாசங்கள் மற்றும் சாம்ராஜ்ஜியம் ஒழிந்துவிட்டது என்றே சொல்லலாம்.
தற்போது டிடிவி.தினகரனுடன் பெரம்பூர் எம்எல்ஏ வெற்றிவேல், ஓ.பி.எஸ்.சுக்கு பிடிக்காத தங்க தமிழ்செல்வன், தேனி கதிர்காமு, சாத்தூர் சுப்பிரமணியன் மற்றும் மாஜிக்கள் தளவாய் சுந்தரம், பாலகங்கா, கலைராஜன் உள்ளிட்டோர் மட்டுமே உடன் இருக்கின்றனர்.
இதுபுரியாமல் ஒ.பி.எஸ். மற்றும் எடப்பாடியின் ஆட்டத்தை இன்னும் அறிந்து கொள்ளாமல், நாஞ்சில் சம்பத்தை வைத்து தினகரன் பேச வைத்து வருகிறார். இது கடைசி வரை மோதி பார்த்துவிடுவோம் என்ற தினகரனின் எண்ணத்தையே பிரதிபலிக்கிறது.
மேலும் இன்று மாலை 3 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் எனவும் தினகரன் அறிவித்துள்ளார்.
ஆனால், அந்த கூட்டத்தில் 10 எம்எல்ஏக்கள் கலந்து கொள்வார்களா என்பதே சந்தேகம்தான். அதனால், கூட்டம் நடைபெறுமா என்ற ஐயமும் எழுந்துள்ளது.
தினகரன் கூட்டம் அறிவித்துள்ள இந்த நிலையில், எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள் அவரவரர்களது இல்லத்திலேயே அதே 3 மணிக்கு கூட்டம் நடக்கும் என அறிவித்துள்ளனர். மாவட்ட எம்எல்ஏக்கள் மட்டுமின்றி அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கே.சி.வீரமணி, தங்கமணி, வேலுமணி ஆகியோரும் தங்களது மாவட்ட நிர்வாகிகளுடன் மாலை 3 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவுறுத்தியுள்ளனர். எடப்பாடி அணியின் போட்டி கூட்டத்தால், தினகரன் அணியினர் கதி கலங்கி போயுள்ளனர்.