
கிருஷ்ணகிரியில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக் கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் அதிமுக தலைமையில் இருண்ட ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின், ஆர்.கே.நகர் தொகுதியில் இடை தேர்தல் நடத்தப்படுகிறது. ஒற்றுமை இல்லாத கட்சியில் 3 அணிகளாக பிரிந்து மோதுகின்றன.
இதில், முதல் இடத்தில் உள்ள அணியில் தினகரன் வேட்பாளராக நிற்கிறார். இவருக்கு போட்டியே தேவையில்லை. யார் இவருக்கு எதிராக நின்றாலும், வெற்றி பெறுவார்கள். இவ்வளவு ஏன், அவரது ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமியே போட்டியிட்டாலும் சர்வ சாதாரணமாக ஜெயித்துவிடுவார்.
அதிமுகவில் பொது செயலாளராக சசிகலாவும், துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொறுப்பேற்றுள்ளது செல்லாது என அந்த கட்சியை சேர்ந்தவர்களே புகார் தெரிவிக்கின்றனர்.
உச்சநீதிமன்றத்தால், குற்றவாளியாக தெரிவிக்கப்பட்ட ஒருவரின் படத்தை அனைத்து பகுதியிலும் வைக்கிறார்கள். கட்சி கூட்டங்களிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் வைக்கிறார்கள். இதுவே சட்ட விரோதமான செயல். இதற்கும் அவர்கள் விரைவில் பதில் அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் நடக்கும் இருண்ட ஆட்சி பினாமி ஆட்சி. சிறையில் உள்ள குற்றவாளி ஒருவரின், வழிகாட்டுதல்படி நடக்கிறது. குற்றவாளி வழி நடத்தும் ஆட்சி எப்படி இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.