
சென்னை ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கும் ஓபிஎஸ் அணி வேட்பாளருக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுவதாக உளவுத்துறை தெரிவித்திருப்பது சசிகலா தரப்பை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து அவரது ஆர்கே நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை சார்பில் தீபா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர தேமுதிக தனது வேட்பாளரை களமிறக்கியுள்ளது. பாஜக சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷ்க்கும், ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுவதாக என உளவுத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிகின்றன. சசிகலா தரப்பினரை இந்த தகவல் அதிர்ச்சியடைய செய்துள்ளது.