
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுகவில் அடிக்கடி சலசலப்பு ஏற்பட்டு வந்தன. ஆனால், அதை யாரும் வெளியே சொல்லாமல், கமுக்கமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையொட்டி, கடந்த 2 மாதத்துக்கு, ஓ.பன்னீர்செல்வம் பொங்கி எழுந்து, அதிமுகவின் தனி அமைப்பை உருவாக்கினார். அவருக்கு ஆதரவு தெரிவித்து, பல மூத்த நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அவருடன் சென்றனர்.
மேலும், முதலமைச்சராக தன்னை அறிவிக்க வேண்டும். அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என ஓ.பி.எஸ். முடிவு செய்தார்.
இதை அறிந்த சசிகலா, எம்எல்ஏக்கள் அனைவரையும், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டதாகவும், கூறப்பட்டது. இதனால், எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக அறிவித்தனர்.
ஆனாலும், சசிகலா தரப்பில் உள்ள சில எம்எல்ஏக்கள், எந்நேரத்திலும் ஓ.பி.எஸ். பக்கம் போகலாம் என கருதப்படுகிறது.
இதற்கிடையில், சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். இதையொட்டி கட்சியை வழி நடத்த டி.டி.வி.தினகரனை அதிமுக துணை பொது செயலாளராக நியமித்தார்.
இதை தொடர்ந்து, கட்சியின் அனைத்து பணிகளையும், திட்டங்களையும் தினகரனே முடிவு செய்து நடத்தி வருவதாக அதிமுகவினர் கூறுகின்றனர். இதனால், முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் பனிப்போர் நடந்து வருகிறது.
எதை பற்றியும் வெளியே சொல்லாமல் உள்ள எடப்பாடி பழனிச்சாமி, தனக்கு என ஒரு பாதையை அமைத்து, அதில் தடங்கல் இல்லாமல் சென்று கொண்டு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அதிமுகவில் பல பிரச்சனைகள் இருக்கிறது. அதை யாரும் வெளியே சொல்வது கிடையாது. அதுபோல் பேசியதால்தான், ஓ.பி.எஸ். வெளியே சென்றார். அவருக்கு பதவியும் போனது.
இதனால், எடப்பாடி எதையும் பேசாமல் தனது பாணியில் சென்று கொண்டு இருக்கிறார். மேலும், அதிமுக மேலிடத்தை பகைத்து கொண்டால், அனைத்து செல்வாக்கையும் இழக்க நேரிடும் என அவருக்கு தெரியும் அதனால், அவர் எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்.
நேற்று முன்தினம் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், தினகரன் பேசினார். அப்போது, அனைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். ஆனால் முதலமைச்சராக உள்ள எடப்பாடி, செங்கோட்டையன் ஆகியோரை பற்றி பேசவே இல்லை.
அப்போது, அருகில் இருந்த சில நிர்வாகிகள், கூறியதை தொடர்ந்து “என்னை வாக்காளர்களுக்கு அறிமுகம் செய்த முதலமைச்சர் எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்கும் நன்றி” என கூறினார்.
இதேபோல் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், ஆர்கே நகர் தொகுதி புதுவண்ணாரப்பேட்டை 40வது வார்டில் உள்ள பெருமாள் கோயிலில் டி.டி.வி.தினகரனும், எடப்பாடி பழனிச்சாமியும் தரிசனம் செய்தனர்.
பின்னர், திறந்த வெளி ஜீப்பில் இருவரும் பிரச்சாரம் செய்தனர். சிறிது தூரம் சென்ற அவர்கள், ஜீப்பில் இருந்து இறங்கி ஏ.இ. கோயில் தெருவில் நடந்தே சென்று வாக்கு சேகரித்தனர்.
அப்போது, வேட்பாளர் தினகரன் மட்டும் கையெடுத்து வணங்கி, பொதுமக்களிடம் வாக்கு கேட்டார். ஆனால், உடன் சென்ற முதல்வர் எடப்பாடி, சாதாரணமாகவே நடந்து சென்றார்.
இதுபோல் எடப்பாடி பழனிச்சாமி, தனக்கென தனி ட்ராக்கில் செல்வதை, டி.டி.வி.தினகரன் ஏற்கனவே அறிந்துள்ளார். இதனால், அவரை வெளியே நகர கூடாது என்பதற்காக, அவருக்கும் தொப்பியை போட்டு, தன்னுடன் வைத்து கொண்டார்.