
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து தமிழகம் திரும்பியுள்ள சசிகலா வருகையும், அதனையொட்டி அதிமுக எடுத்த நடவடிக்கைகளும் தொடர்ந்து உற்று நோக்கப்பட்டு வருகிறது.
ஆனால் சென்னை வந்த பிறகு செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எதுவும் நடக்கவில்லை. மேலும் அவர் யாரையும் சந்திக்கவும் இல்லை. மேலும் சென்னை வந்ததில் இருந்தே அவர் அமைதியாகவே இருந்து வருகிறார். எனினும் அவரின் அமைதிக்கு பின்னால் பல்வேறு அதிரடி திட்டங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் முதலில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு, அரசியலில் இறங்குவார் என்றும் தெரிகிறது. அந்த வகையில், இவ்வளவு நாள் விசாரிக்கப்படாமல் இருந்த பொதுச்செயலாளர் ரத்து தொடர்பான வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்று சசிகலா சென்னை சிவில் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு மார்ச் 15-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
மேலும் சசிகலா வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோரின் வாக்குக்கள், அதிமுகவின் இரட்டை தலைமை மீதிருக்கும் அதிருப்தி என்ற பல காரணங்களால் அமமுகவையும், அதிமுகவையும் இணைக்க தமிழக பாஜக தலைவர்கள் சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றதாக கூறப்படுகிறது. சசிகலாவை மீண்டும் அதிமுகவிற்குள் கொண்டு வரவேண்டும் என்று கட்சி மேலிடத்திற்கு தமிழக பாஜகவின் 2-ம் கட்ட தலைவர்கள் சிலர் வலியுறுத்தினராம்.
ஆனால் இதனை விரும்பாத எடப்பாடி பழனிசாமி, முக்குலத்தோரின் வாக்குகளை பெறவும், தென் தமிழகத்தில் வெற்றி பெறவும் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறாராம்.. சசிகலா கட்சிக்குள் நுழைந்தால், அவரின் ஆதிக்கம் கட்சிக்குள் அதிகரிக்கும். மேலும் கட்சியிலும், ஆட்சியிலும் எடப்பாடியின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. சசிகலா கட்சிக்குள் வந்தால் தனது அதிகாரம் போய்விடும் என்று எடப்பாடி கருதுகிறாராம்.
மேலும் 2019-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் சசிகலா மற்றும் அமமுக இல்லாமல் தான் நாம் வெற்றி பெற்றோம். எனவே அவர்கள் இல்லாமல் வரும் ஓட்டுகளே போதும் என்று கறாராக கூறிவிட்டாராம்.. அதுமட்டுமில்லாமல் சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் மீது பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவிற்கு பெரிதாக நல்ல அபிப்ராயம் இல்லை. எனவே அவர்களை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று மோடி, அமித்ஷா இருவரும் கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்று உறுதியாக நினைக்கிறாராம்.
குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய பட்டியலினத்தின் ஏழு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க வேண்டும் என்ற அவர்களின் நீண்டநாள் கோரிக்கையை மத்திய அரசு மூலம் நிறைவேற்றிவிட்டார் பழனிசாமி. முக்குலத்தோர் சமூக வாக்குகளைக் கவர, உசிலம்பட்டியில் மூக்கையா தேவரின் சிலையை விரைவில் பன்னீரும் பழனிசாமியும் சேர்ந்து திறக்கவிருக்கிறார்கள். முத்தரையர் சமூகத்தினரின் வாக்குகளை வளைப்பதற்காக, வலையர்கள் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்றார் பழனிசாமி. இப்படி, சசிகலாவால் கிடைக்காமல் போகக்கூடிய முக்குலத்தோர் வாக்குகளுக்கு ஈடுகட்டும்விதத்தில், தென்மாவட்டத்தில் சில சமூக அரசியலையையும் பழனிசாமி கையில் எடுத்திருக்கிறார்” என்றனர்.
என்ன தான் சசிகலா இணைக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தாலும், அவர் மீது பயமும் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதனால் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று அவரது நினைவிடத்தை திறக்காமல், அனைத்து விழாக்களையும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடத்த இபிஎஸ் திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டால் சசிகலா அங்கு செல்வார் என்பதால் இந்த நடவடிக்கையும் எடப்பாடி எடுத்துள்ளார்.
எனினும் இது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை தான். மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு தான் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட உண்மையான நிலைப்பாடு என்னவென்று தெரியவரும்.. அதாவது யார் சசிகலா பக்கம் செல்கிறார்கள் என்பது அதன்பிறகு தான் தெரியவரும்.