எதற்கும் அஞ்சமாட்டேன்…. கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை அதிமுகவில் இருப்பேன்….எடப்பாடி உருக்கம் !!

By Selvanayagam PFirst Published Jan 18, 2019, 10:00 PM IST
Highlights

திமுக என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சமாட்டேன் என்றும் எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும வரை அதிமுகவில் இருப்பேன்  என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக தெரிவித்தார்.

மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது. வீட்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஷயான், மனோஜ் உள்ளிட்டோர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த நிலையில் கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி, ஷயான், மனோஜ் மற்றும் ‘தெகல்கா’ புலனாய்வு பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந் தேதி டெல்லியில் வீடியோ வெளியிட்டனர்.  இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக பதில் அளித்துள்ளார்

சென்னை காட்டுப்பாக்கத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கோடநாடு தனியார் கட்டுப்பாட்டில் உள்ளது. கோடநாடு சம்பவம் கூலிப்படையால் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஆதாரம் இருந்தால் எங்களை சசிகலா குடும்பத்தினர் சும்மா விடுவார்களா? என கேள்வி எழுப்பினார்.

ஆனால்  கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக உள்ளது. சயான், மனோஜை ஜாமீனில் எடுத்தது திமுக தான். தெகல்கா முன்னாள் ஆசிரியரின் பேட்டி திமுகவால் செய்யப்பட்ட நாடகம் என்று தெரிவித்தார்.

கோடநாடு விவகாரத்தில் திட்டமிட்டு திமுக நடத்தும் நாடகத்தை சட்டப்படி தவிடு பொடியாக்கி காட்டுவேன். ரூ.1000 பொங்கல் பரிசு கொடுத்ததால் பொறுக்க முடியாமல் பொய் வழக்குகளை ஜோடிக்கின்றனர் என தெரிவித்த  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதற்கும் அஞ்சமாட்டேன் என்றும் எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும வரை அதிமுகவில் இருப்பேன்  என்றும் கூறினார்.

click me!