தமிழக இஸ்லாமியர்களை பத்திரமா பார்த்துக்கங்க.. டெல்லி முதல்வருக்கு எடப்பாடியார் கடிதம்

By karthikeyan VFirst Published Apr 24, 2020, 7:52 PM IST
Highlights

டெல்லியில் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலும் இருக்கும் 559 தமிழக இஸ்லாமியர்களுக்கு தகுந்த உணவு மற்றும் சிகிச்சையளிக்குமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
 

இந்தியாவில் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 1755 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 866 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தமிழ்நாட்டு மக்களை கொரோனாவிலிருந்து காக்கும் பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா நோயாளிகளுக்கும் சிறப்பான சிகிச்சையளிக்கப்படுவதுடன், சத்துணவுகள் வழங்கி அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதை உறுதி செய்து அதிகமானோரை கொரோனாவிலிருந்து குணமடைய வைத்துவருகின்றனர். தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சை பணிகளும் தடுப்பு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

அதனால் தான் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 22ஆகவும் குணமடைந்தோரின் எண்ணிக்கை 866ஆகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் நின்றுவிடாமல், டெல்லியில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளார் முதல்வர் பழனிசாமி. 

டெல்லி தப்லிஹி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகத்திற்கு திரும்பாமல் அங்கேயே 559 பேர் இருந்தனர். அவர்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ளனர். 

இந்நிலையில், அவர்களின் விவரங்களுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தை சேர்ந்த 559 பேர் டெல்லியில் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலும் உள்ளனர். அவர்களுக்கு சிறப்பான சிகிச்சையளிப்பதுடன் ஆரோக்கியமான உணவு அளித்து பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளுமாறும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சரியான மருத்துவ உதவி அளித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 

click me!