அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்ததையடுத்து இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவியேற்கவுள்ளார். இது தொடர்பாக ஆலோசித்து தேர்தல் தேதி அறிவிக்க அதிமுக மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் தேர்தல்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதிகார போட்டியால் அதிமுக 4 பிரிவாக பிளவு பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என பிரிந்துள்ளது. இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். மேலும் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். இந்த உத்தரவிற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு சட்டப்போரட்டம் நடத்தியது. இந்தநிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியது. இதன் காரணமாக எடப்பாடி அணியினர் உற்சாகத்தில் உள்ளனர். இதற்க்கு செக் வைக்கும் வகையில் ஓபிஎஸ் தரப்பு ஜூலை 11 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் வருகிற 9 ஆம் தேதி அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து 10 ஆம் தேதி அதிமுக மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழி வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழி வேண்டும் எனவே தற்போது உள்ள சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இருந்த போதும் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் தேதி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இதையும் படியுங்கள்