திமுக ஒரு கார்பரேட் கம்பெனி.! சேர்மன் ஸ்டாலின்.! டைரக்டர்கள் உதயநிதி,சபரீசன், கனிமொழி - விளாசும் எடப்பாடி

By Ajmal Khan  |  First Published Mar 6, 2023, 9:34 AM IST

சினிமா தயாரித்தால் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு தான் வழங்க வேண்டும் இல்லை என்றால் சினிமா தியேட்டர்கள் வழங்கப்படாது. இதனால் 150 சிறிய திரைப்படங்கள் வெளியிடப்படாமல் முடங்கி கிடப்பதாக எடப்பாடி கே.பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.


பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் ஆட்சி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஆர் கே நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதனை தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின் பிரிந்த இயக்கத்தை ஒன்றாக இணைத்த பெருமை ஜெயலலிதாவையே சாரும் என்று தெரிவித்தவர்,  அதிமுக அழிந்து விட்டது என அனைவரும் நினைத்த நேரத்தில் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்து 15 ஆண்டுகாலம் ஆட்சி செய்தவர்தான ஜெயலலிதா என குறிப்பிட்டார். குடும்ப வாரிசுக்கு தலைவர் பதவி வழங்குவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், ஒரு சாதாரண தொண்டன் கடுமையாக உழைத்தால் என்னை போல இங்கு வர முடியும்.

Tap to resize

Latest Videos

இரட்டை வேடம் அல்ல, இருபது வேடங்கள் கூடப் போடுவீர்கள்.! திமுகவிற்கு எதிராக சீறும் அண்ணாமலை

 திமுக கார்பரேட் கம்பெனி

அதே சமயத்தில் திமுக கட்சி அல்ல கார்பரேட் கம்பனி  என விமர்சித்தார். அந்த கார்பரேட் கம்பனிக்கு சேர்மேனாக ஸ்டாலின் உள்ளார், உதயநிதி ஸ்டாலின், சபரீசன், கனிமொழி ஆகியோர் அந்த கம்பனியின் டைரக்டர்களாக உள்ளனர்கள் என்று குற்றம் சாட்டினார். குறிப்பாக திமுகவின் 22 கால ஆட்சியில் மக்கள் என்ன நன்மை பெற்றனர்? துன்பமும் வேதனையும் மட்டுமே மக்களுக்கு வாய்த்துள்ளது.  22 மாதகால திமுக ஆட்சியில் அவரின் தந்தைக்கு நினைவிடம், மதுரையில் நூலகம், எழுதாத பேனாவை 81 கோடியில் வைக்கின்றனர். கருணாநிதிக்கு பேனா வைக்க வேண்டாம் என கூறவில்லை, எழுதாத பேனாவை அவர் நினைவிடம் அருகே 2 கோடியில் வைத்துவிட்டு மீதம் உள்ள 79 கோடிக்கு எழுதுகின்ற பேனாவை மாணவர்களுக்கு கொடுங்கள்  என தெரிவிப்பதாகத்தான் கூறினார். 

வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை

அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்குத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் ரிப்பன் வெட்டிக்கொண்டு உள்ளார்,அடிக்கல் நாட்டி வருகிறார். திமுக காலத்தில் எந்த திட்டமும் வரவில்லை. இப்படி பல திட்டங்களை கொண்டு வந்த எங்க ஆட்சியை பார்த்து எதுவும் நடைபெறவில்லை என கூறுகிறார். தமிழகத்திற்கு புதிய புதிய தொழில்கள் வருகின்றன.அதற்கு தேவையான தொழிலாளர்கள் இன்று தேவை, ஆட்கள் பற்றா குறை உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து இங்கு வந்து பணி செய்கின்றனர் அவர்களுக்கு நாம் பாதுகாப்பு வழங்க வேண்டும் அப்போது தான் தொழில்கள் சிறக்கும். எனவே தவறான பிரச்சாரங்களை யாரும் செய்ய வேண்டாம் ஏன் என்றால் நம்முடைய மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும்.அவ்வாறு தவறான பிரச்சாரங்களை யார் பரப்பினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கேட்டுக்கொண்டார். 

திரைப்படங்கள் வெளியிட முடியவில்லை

சினிமா தயாரித்தால் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு தான் வழங்க வேண்டும் இல்லை என்றால் சினிமா தியேட்டர்கள் வழங்கப்படாது. இதனால் 150 சிறிய திரைப்படங்கள் வெளியிடப்படாமல் உள்ளது,அரசு துறை மட்டும் இல்லாமல் சினிமா துறையையும் ஒரே குடும்பம் வைத்துள்ளது  கடுமையாக விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு போகிறேன் என கூறுகிறார். இங்கேயே ஒன்னும் கிடையாது இங்கு என்ன செய்தார் என அவருக்கும் தெரியவில்லை மக்களுக்கும் தெரியவில்லை. கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானத்தில ஏறி வைகுண்டம் காட்டுவேனு கூறினானம் என்பது போல உள்ளது அவரது பேச்சு என விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்

ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் தற்கொலை.! மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காவிட்டால் போராட்டம்- அன்புமணி எச்சரிக்கை

click me!