கஜா களத்தை ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிடும் பழனிசாமி…. சாலை வழியாக செல்லும் திட்டம் ரத்து….

By Selvanayagam PFirst Published Nov 19, 2018, 10:20 PM IST
Highlights

கஜா  புயலால் பாதிக்கப்பட்ட நாகை, புதுக்கோட்டை, தஞ்சை மற்றும் திருவாரூர் பகுதிகளை நாளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.  இந்தப் பகுதிகளில் அமைச்சர்களுக்கு பொது மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் சாலை வழியாக சென்று சேத பகுதிகளை பார்வையிட இருந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவு நாகை வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது.  இதில் நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன.

சுழன்று அடித்த புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும், 40 ஆயிரம் மின் கம்பங்களும் சாய்ந்தன. மேலும் சுமார் 350 மின்மாற்றிகளும் சேதம் அடைந்து உள்ளன. இதுதவிர 1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக் கின்றன.

புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

இதேபோல் உயிர் இழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

இதனிடையே புயல் வருவதற்கு முன்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் வெகுவாக பாராட்டினர். ஆனால் மீட்புப் பணிகள் சிறப்பாக இல்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. குறிப்பாக புயல் வந்து சென்று 4 நாட்கள் ஆகியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு போகவில்லை என அம்மாவட்டங்களில் உள்ள கொந்தளித்துப் போயுள்ளனர்.

சேத பகுதிகளை பார்வையிட சென்ற ஓ.எஸ்.மணியனை பொது மக்கள் ஓட ஓட விரட்டியடித்தனர். இதே போல் அமைச்சர்கள் விஜய பாஸ்கர், கடம்பூர் ராஜுஇ வைத்தியலிங்கம் எம்.பி. ஆகியோரையும் பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கடந்த இரண்டு நாட்களாக சேத பகுதிகளை பார்வையிடப்போவதாக அறிவித்திருந்த எடப்பாடி பழனிசாமி அந்த நிகழ்ச்சிகளை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். பொது மக்களை சந்திகக்க எடப்பாடி பயப்படுகிறார் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி நாளை பார்வையிடுகிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் எடப்பாடி  அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகையில் புயல் சேத பகுதிகளை பார்வையிடுகிறார். சாலை வழியாக செல்லும் திட்டத்தை முதலமைச்சர் ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.

click me!