“எங்கே வரணும் ஸ்டாலின்..?” சவாலை ஏற்றார் இபிஎஸ்.. களைகட்டும் தேர்தல் களம்..!

By vinoth kumarFirst Published Feb 11, 2022, 11:35 AM IST
Highlights

அதிமுக ஆட்சியில் நீட் கொண்டுவரப்பட்டது என வேண்டுமென்றே திட்டமிட்டு ஸ்டாலின் பொய் பேசி வருகிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. 

பொய் கூறுவதில் தான் ஸ்டாலின் சூப்பர் முதலமைச்சர். நிர்வாகத்தில் அல்ல. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை துவக்கி வைத்துவிட்டு ஸ்டாலின் பெருமை பேசி வருகிறார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். 

திருப்பூர் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது  நீட் தேர்வு திமுக ஆட்சியில் எந்த மையத்தில் நடந்தது என்று கூறமுடியுமா? அதிமுக பதுக்கியதால் தான் தமிழகத்தில் நீட் வந்தது. ஆதாரங்களுடன் நிரூபிக்க தயார். நீட் தொடர்பாக விவாதிக்க தயார் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில்;- நீட் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சவாலுக்கு நாங்கள் தயார். பொது இடத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ம் நானும் தயார் என திமுகவுக்கு சவால் விடுத்துள்ளார்.அதிமுக ஆட்சியில் நீட் கொண்டுவரப்பட்டது என வேண்டுமென்றே திட்டமிட்டு ஸ்டாலின் பொய் பேசி வருகிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. 

நீட் தேர்வு யாருடைய ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது? எதையாவது கூறி ஸ்டாலின் தப்பிக்க பார்க்கிறார். ஆட்சி பொறப்பேற்றதும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என ஸ்டாலின் கூறியது பொய் என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நீட் தேர்வு ரத்து செய்ய ரகசியம் உள்ளதாக கூறிய உதயநிதி தற்போது என்ன செய்கிறார்? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

இளைஞர்கள், மாணவர்களுக்கு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துவிட்டு தற்போது மாற்றி மாற்றி பேசுகின்றனர். வேண்டுமென்றே திட்டமிட்டு நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின் தற்போது விழிபிதுங்கி நிற்கிறார். 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக ஸ்டாலின் பொய் பேசி வருகிறார். ஸ்டாலின் 70 சதவீதம் கூறுகிறார் என்றால் அவரது மகன் உதயநிதி 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார். 

இந்தியாவிலேயே சூப்பர் முதலமைச்சர் நான் தான் என தன்னைத்தானே ஸ்டாலின் கூறி வருகிறார். முதலமைச்சர்களுக்குகெல்லாம் முதலமைச்சர் எனவும் ஸ்டாலின் கூறி வருகிறார். பொய் கூறுவதில் தான் ஸ்டாலின் சூப்பர் முதலமைச்சர். நிர்வாகத்தில் அல்ல. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை துவக்கி வைத்துவிட்டு ஸ்டாலின் பெருமை பேசி வருகிறார். அதிமுக ஆட்சியின் சாதனைகளை சொல்லி நாங்கள் வாக்கு கேட்போம். திமுகவினரால் என்ன சொல்ல முடியும் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!