ஆட்சியைக் காப்பாற்ற வியூகம்... எடப்பாடி குறி வைத்துள்ள அந்த எட்டுத் தொகுதிகள்..!

By Thiraviaraj RMFirst Published Apr 11, 2019, 12:12 PM IST
Highlights

8 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியே தொடரும் எனக் கணக்கிட்டு உள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பு.

மோடியின் ஆசியோடு தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடக்கிறது என எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்தாலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆட்சியை நகர்த்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலத்திற்கு வரும் மே மாதம் 23ம் விடை கிடைத்து விடும்.

பாமக, தேமுதிக போன்ற கூட்டணி கட்சிகளின் வாக்குகளை நம்பியே ஆட்சி தொடரும் என்கிற உறுதியில் இருக்கிறது எடப்பாடி தலைமையிலாவ ஆட்சி. தமிழக சட்டப்பேரவையின் மொத்த எண்ணிக்கையான 234-ல் தற்போது காலியாக இருக்கும் 22 தொகுதிகள் தவிர்த்து மீதமுள்ள 212-ல் தற்போது ஆட்சியை நீட்டிக்க 107 உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சி நடைபெற்று வருகிறது. 

வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலோடு 18 தொகுதிகளுக்கும், பின்னர் மே 19ஆம் தேதி 4 தொகுதிகளுக்கும் என 22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல்களின் முடிவுகள் மே 23- ம் தேதி அறிவிக்கப்படும். அதன் பிறகு அவையின் பலம் 234ஆக உயரும். அதில் 117 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே எடப்பாடியால் ஆட்சியை தக்கவைக்க முடியும். 

88 உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஸ்டாலின், கையில் வைத்திருந்த ஆட்சியை நழுவவிட்ட ஏக்கத்தோடும், பழி தீர்க்கும் வெறியோடும் காத்திருக்கும் டி.டி.வி.தினகரன் என இருவரிடம் இருந்தும் தப்பித்து ஆட்சியை நீட்டித்துக்கொள்ள எடப்பாடிக்கு பாமகவும், தேமுதிகவும் கைகொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. 

தென் தமிழகத்தில் அதிமுக தொடர்களையும் சாதி அரசியலையும் டிடிவி தினகரன் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு விட்டார். இந்த தகவலை உளவுத்துறை மூலம் சேகரித்துக்கொண்ட ஆளும் தரப்பு கடும் அப்செட் ஆகியுள்ளது. இருப்பினும், பாமகவையும், தேமுதிகவையும் வைத்து காய் நகர்த்தி பெரும்பான்மைக்கு தேவையான வெற்றியை பெற்று விட எடப்பாடி தரப்பு வியூகம் வகுத்துள்ளது.  

பாமக, தேமுதிக வலுவாக இருக்கும் குடியாத்தம், ஆம்பூர், சோளிங்கர் ஆகிய முன்று தொகுதிகளில் இஸ்லாமியர் வாக்குகள் அதிகம் இருக்கும் ஆம்பூரை தவிர்த்து இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றிட அதிமுக துடித்துக் கொண்டிருக்கிறது. பூந்தமல்லி, திருப்போரூர் ஆகிய இரு தொகுதிகளை பாமக, தேமுதிகவின் வாக்குவங்கியை வைத்து நம்பிக் கொண்டிருக்கிறது. 

ஆனால், அந்த இரு தொகுதிகளிலும் பாமகவுக்கு நிகரான செல்வாக்கை மதிமுக வைத்திருப்பது திமுக அணிக்கு சாதகமாக மாறலாம்.  ஒசூர் தொகுதியில் பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவி ஜோதி களமிறக்கப்பட்டுள்ளார். இங்கு அவர் சார்ந்த சமூகத்தின் வாக்குகளும், கர்நாடக எல்லை என்கிற முறையில் பாஜகவிற்கு இருக்கும் வாக்குகளும் வெற்றிக்கு உதவும். பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அதிமுக வலுவாக இருக்கிறது. அங்கு இருக்கும் பாமகவின் வாக்கு வங்கி அதிமுகவிற்கு கூடுதல் பலமாக இருக்கும். அதேசமயம், அரூர் தொகுதியில் விசிகவிற்கு செல்வாக்கு இருப்பதால், அங்கு திமுக அதிமுக இடையே கடும் போட்டி நிலவும்.

சூலூர் தொகுதி கோவை பெல்டில் வருவதால் அந்தத் தொகுதியை அதிமுகவின் செல்வாக்கை வைத்தே வெற்றி பெற்று விடலாம் என நம்பி உள்ளது. கடைசி நேர பண பாய்ச்சல்களே தேர்தல் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்திடும் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆகையால் 8 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியே தொடரும் எனக் கணக்கிட்டு உள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பு.

click me!