
பொது மக்களுக்கு காய்ச்சல் வருவது இயற்கையானது, அதை கிண்டல் பண்ணக்கூடாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது..
இந்தவிழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சியிலே என்ன திட்டம் மக்களுக்கு கிடைத்திருக்கின்றது, என்ன நன்மை கிடைத்திருக்கின்றது என்று அடிக்கடி புலம்பிக் கொண்டிருக்கிறார். நம்முடைய கட்சி பற்றியும், ஆட்சி பற்றியும் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். அதேபோல, மாற்றுக்கட்சியை சேர்ந்த தலைவர்களும் விமர்சனம் செய்கிறார்கள்.
மாற்றுக் கட்சியினர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஆதாரம் இல்லாத குறைகளை கூறிக்கொண்டிருக்கிறார்கள். குறை கூறுபவர்கள் குறை கூறிக்கொண்டு தான் இருப்பார்கள். குறைகளுக்கு அவர்களால் தீர்வு சொல்ல தெரியாது என்று கூறினார்..
இந்த அரசை குதிரை பேர அரசு என்று ஸ்டாலின் கூறிவருகிறார். ஆனால் விரைவிலேயே தீர்ப்பு வரும் அப்போது தெரியும் யாருடைய ஆட்சியில் குதிரை பேரம் நடந்தது என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், பொது மக்களுக்கு காய்ச்சல் வருவது இயற்கையானது, அதை தீர்ப்பதற்கு வழி சொல்ல வேண்டுமே தவிர அதை கிண்டல் பண்ணக்கூடாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.