மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் ; திமுக அரசுக்கு ‘எடப்பாடி பழனிசாமி’ எச்சரிக்கை !

By manimegalai aFirst Published Nov 18, 2021, 1:21 PM IST
Highlights


‘மாணவர்களின் கோரிக்கையை ஏற்று  வரும் செமஸ்டரில் மட்டும் நேரடி தேர்வாக நடத்தாமல் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த வேண்டும். மாணவர்கள் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும்’ என்று திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி

 

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த போது, பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் நடைபெற்ற தேர்வுகளில் பல்வேறு சிக்கல்களை மாணவர்கள் எதிர்கொண்டதால், மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தேர்வுகளானது எழுத்துத்தேர்வாகவே நடத்த உத்தரவிடப்பட்டது.கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட மற்ற படிப்புகளில் தேர்வுகளானது ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் அனைத்து தேர்வுகளும் நேரடியாக நடைபெறும் என்று கல்லூரிகள் அறிவித்தன.

 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை காமராஜர் பல்கலை கழகம், அமெரிக்கன் கல்லூரி, யாதவர் கல்லூரி, மன்னர் திருமலை கல்லூரி, மதுரைக்கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரியிலிருந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மதுரையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற 150 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் போராட்டம் நடத்திய 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மேலும் 300 மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.மதுரை மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் போராடிய மாணவர்களை கைது செய்திருக்கிறது காவல்துறை.

எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மாணவர்களை கைதினை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், ‘தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக சுமார் 20 மாதங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறந்து வைத்து இரண்டரை மாதங்கள் ஆனதாலும், முழுமையாக நேரடி வகுப்புகள் நடைபெறாததாலும்,பண்டிகை காலம்,பருவ மழை என்று விடுமுறை அளிக்கப்படுவதாலும், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த செமஸ்டருக்கு உரிய பாடங்களை ஆசிரியர்கள் முழுமையாக முடிக்கவில்லை என்றும், எனவே செமஸ்டர் தேர்வுக்கு முன் நடத்தப்படும் மாதிரி தேர்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.

தற்போது தமிழகம் முழுவதும் இரண்டு டோஸ்கள் போடப்பட்டு வருகிறது.பலர் இரண்டு டோஸ்களும் போடாமல் இருக்கின்றனர். செமஸ்டருக்கான சிலபஸை ஆசிரியர்களும் முடிக்கவில்லை என்று பல்வேறு செய்தித்தாள்களில் செய்திகள் வருகின்றது. கடந்த இரண்டு,மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆன்லைன் தேர்வுகள் வேண்டும் என்று போராடிய மாணவர்களை கைது செய்து இருக்கிறது.இது கண்டிக்கத்தக்கது.மாணவர்களின் கோரிக்கையானா ஆன்லைன் தேர்வை அரசு நடத்த வேண்டும்.மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

 

click me!