சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு.. நன்றி கூறிவிட்டு நழுவிய எடப்பாடியார்..!

By vinoth kumarFirst Published Jul 26, 2021, 3:13 PM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பிரதமருக்கு நன்றி தெரிவித்தோம். மேகதாதுவில் அணையை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி தரக்கூடாது. மேகதாது அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினோம். 

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பிரதமருக்கு நன்றி தெரிவித்தோம் என  எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நேற்று தனித் தனியே டெல்லி புறப்பட்டுச் சென்றது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இன்று காலை பிரதமர் நேரம் அளித்த நிலையில் பிரதமரை மக்களவை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் சந்தித்தனர். அவர்களுடன் தம்பிதுரை, எஸ்.பி.வேலுமணி, மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம், உள்ளிட்டோர் உடன் சென்றனர். 

இதனையடுத்து, பிரதமர் மோடியை சந்தித்த பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பிரதமருக்கு நன்றி தெரிவித்தோம். மேகதாதுவில் அணையை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி தரக்கூடாது. மேகதாது அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினோம். 

தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதை அதிகப்படுத்த வேண்டும். காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளோம். இலங்கையின் தாக்குதலை தடுத்து மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் படகுகளை விடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்று மாதங்கள் தான் ஆகிறது அதற்குள் அவர்களை என்ன விமர்சனம் செய்வது என்றார். அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியில் தொடர்ந்து அற்பணிப்புடன் செயல்படுவோம். அதிமுக கட்டுக்கோப்புடன் உள்ளது. கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. அதிமுக தலைமை மீது எந்த தொண்டருக்கும் அதிருப்தி இல்லை. மேலும், அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என சசிகலா கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டு நன்றி என கூறி எடப்பாடி பழனிசாமி கூறி விடைபெற்றார். 

click me!