தோற்றாலும் அசராத எடப்பாடி பழனிசாமி... மோடியின் திட்டம் கைகொடுக்குமா..?

By Thiraviaraj RMFirst Published May 13, 2021, 6:46 PM IST
Highlights

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பின் திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து கட்சியில் நிலவிய கடும் போட்டிக்கிடையே எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பின் திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து கட்சியில் நிலவிய கடும் போட்டிக்கிடையே எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தநிகழ்வுக்கு பின் உற்சாக மனநிலையில் உள்ள இபிஎஸ், தனக்கு நெருக்கமான சில அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்குவதோடு, டெல்லியின் அடுத்த கட்ட மெகா திட்டத்தை புட்டு புட்டு வைத்து வருகிறார்.
 
அதன்படி அவர் தனது நிர்வாகிகளிடம் பேசுகையில், நடந்த தேர்தலில் அம்மா உதவி இல்லாமல், 66 இடங்களில் வெற்றிப்பெற்றிருப்பது மிகப்பெரிய விஷயம் தான். அதுவும் கூட்டணி கட்சிகளும் வெற்றிப்பெற்றுள்ளனர். எனவே அப்படியே அமர்ந்திடாமல், மக்களிடம் தொகுதி வாரியாக நன்றி சொல்லுங்கள், தோல்வியுற்ற தொகுதி மக்களுக்கும் நன்றி கூறுங்கள் என்று தெரிவித்தார். மேலும் இன்னும் 3 ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதால் அதில் கவனம் செலுத்துங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

அதனுடன் மட்டும் நிற்காமல் அவர் மீண்டும் தனது உரையை நீட்டியபோது, தான் அதில் கூறப்பட்ட டெல்லி மேலிடத்தின் சூட்சமத்தை கண்டு அசந்து போய் உள்ளனர். பழனிசாமி அவர்களிடம் தொடர்ந்து பேசுகையில், தேர்தல் முடிவுக்கு பின் டெல்லியின் முக்கிய தலைகளிடம் தொடர்ந்து பேசியதாக குறிப்பிட்டுள்ளார். பாஜக 4 இடங்களில், குறிப்பாக குமரியில் தாமரை மலர்ந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. கொரோனா எல்லாம் முடிந்த பிறகு மத்திய அரசு ஒருவேளை ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை தனது பெரும்பான்மை பலம் மூலம் கொண்டு வரும் சூழல் உள்ளதாக ஒரு தகவல் என எடப்பாடியார் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை பிரதமர் மோடி தனது முதல் ஆட்சிக் காலமான 2014 முதலே வலியுறுத்தி வருகிறார். 2018ம் ஆண்டு 7 தேசியக் கட்சிகள், 59 மாநிலக் கட்சிகளிடம் மத்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டபோது அப்போதைய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், ‘அத்திட்டத்துக்கு கொள்கை அடிப்படையில் ஆதரிக்கிறோம்’என்று கூறியுள்ளார்.

கடந்த நவம்பர் 26 அன்று இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை தீவிரமாக இருந்த நேரத்திலேயே அரசியல் அமைப்பு தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற மற்றும் அனைத்து சட்டமன்ற தலைவர்களின் காணொலி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அழுத்தமாக வலியுறுத்தினார்.

அப்போது பெரிய நாடான இந்தியாவில் சில மாதங்களுக்கு ஒரு முறை எங்கேயாவது தேர்தல் வந்துவிடுகிறது. இதற்காக தேர்தல் நன்னடைத்தை விதிகள் அமலுக்கு வருவதால், வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார் மோடி.

எனவே தேர்தல் செலவைக் குறைக்கவும், திட்டப்பணிகள் தொய்வில்லாமல் நடக்கவும் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ முறையை செயல்படுத்த வேண்டியது அவசியம். மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களும் நாடாளுமன்றத் தேர்தலும் ஒரேநேரத்தில் நடத்தி முடிக்கப்பட வேண்டும்”என்று பேசினார் பிரதமர் மோடி. இதையே தற்போது எடப்பாடி பழனிசாமியும் தன்னை சந்திக்க வந்தவர்களிடம், சோர்ந்துவிடாதீர்கள். அடுத்த சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நிச்சயம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

click me!