
மத்திய அரசின் சப்ளிமெண்ட் போல் தமிழக அரசு செயல்படுகிறது: என எடப்பாடி அரசின் மீது விமர்சனங்கள் தாறுமாறாக வந்து விழுகின்றன. அதேவேளையில் பி.ஜே.பி. அரசாங்கத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் மாநில அரசுகளும் இந்த தேசத்தில் இருக்கத்தான் செய்கின்றன.
அதில் முக்கியமானது கேரளம். அதன் முதல்வர் பினராயி விஜயனுக்கு, ஆங்கில எழுத்துக்களில் பிடிக்காத மூன்று எழுத்துக்கள் B.J.P. என்பவைதான்.
பி.ஜே.பி. அரசு தமிழகத்தில் என்னதான் தங்களை தூக்கிப் போட்டு பந்தாடினாலும் கூட வலிக்காத மாதிரியே நடித்துக் கொண்டு காலத்தை ஓட்டுவதுதான் எடப்பாடி - பன்னீர் அரசாங்கத்தின் ஸ்டைலாக இருக்கிறது.
ஆனால் அதே தமிழ் மண்ணில் கேரள முதல்வர் வந்து நின்று மத்திய அரசின் மண்டையைப் பிடித்து ஆட்டித் தள்ளியிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்ட மார்க்சிஸ்ட் மாநாட்டில் பேசிய பினராயி விஜயன் “மத்தியில் ஆட்சிதான் மாறியிருக்கிறதே தவிர மக்கள் விரோத கொள்கைகள் மாறவேயில்லை. காங்கிரஸ் கையாண்ட மக்கள் விரோத கொள்கைகளையே தற்போதைய பி.ஜே.பி. அரசும் பின்பற்றுகிறது.
முதலாளித்துவம் மற்றும் சாதிகளுக்கு எதிராக தமிழகத்தில்தான் போராட்டம் துவங்கியது. இந்திய அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக திகழ்கிறது. தற்போது மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் அமைப்புகள்தான் வழி நடத்துகின்றன. இந்த அரசுக்கு சகிப்புத்தன்மை இல்லை. பெங்களூரு எழுத்தாளர் கவுரி லங்கேஷை சுட்டுக் கொன்றது போல் பல எழுத்தாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கவரி, மத்திய அரசுக்கு எதிராக எழுதி வந்தவர் என்பதை நினைவில் கொள்க.
மொத்தத்தில் இந்தியா மதசார்பற்ற நாடாக விளங்கவேண்டும் என்று மத்திய அரசு விரும்பவில்லை. பிரிவினைவாதத்தைத்தான் ஊக்குவிக்கிறது.
பி.ஜே.பி. அரசு சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டை பி.ஜே.பி.யின் தொழிற்சங்கங்களே ஏற்கவில்லை என்றால் நிலையை உணர்ந்து கொள்ளுங்கள்.” என்று பொளந்து கட்டிவிட்டார்.
கேரள மண்ணில் பி.ஜே.பி. மற்றும் சங்பரிவாரங்களுக்கு எதிராக அதிரடிகளை நடத்தி வருகிறது மார்க்சிஸ்ட். இந்நிலையில் தமிழக மண்ணில் வந்து நின்று மத்திய அரசுக்கு எதிராக பினராயி பேசியிருப்பது ‘மாநில சுயாட்சியை வலியுறுத்தாமல் இப்படி உறைஞ்சு போயி உட்கார்ந்திருக்கீங்களே?’ என்று தமிழக அமைச்சரவையை உசுப்பிக் கேட்டது போல் இருக்கிறது! என விமர்சிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.