ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளை, கொலை நடத்தது தான் எடப்பாடியாரின் மிக பெரிய சாதனை... முதல்வரை வச்சு செய்த ஸ்டாலின்

By vinoth kumarFirst Published Nov 9, 2020, 10:48 AM IST
Highlights

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முதல்வர் பழனிசாமியின் பேரில் நேரடியாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன என்றால், அப்படி ஒருவர் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார் என்றால் அது தமிழ்நாட்டுக்கே அவமானம் இல்லையா? இந்த அவமானத்தைத் துடைக்க வேண்டாமா? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முதல்வர் பழனிசாமியின் பேரில் நேரடியாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன என்றால், அப்படி ஒருவர் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார் என்றால் அது தமிழ்நாட்டுக்கே அவமானம் இல்லையா? இந்த அவமானத்தைத் துடைக்க வேண்டாமா? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று நீலகிரி மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்துக்குக் காணொலி வாயிலாகத் தலைமையேற்றார். அப்போது, அவர் பேசுகையில்;- ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு தேயிலைத் தோட்டத்தில் உள்ள பங்களாவில் நடைபெற்ற கொலை- கொள்ளைச் சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மிகப் பெரிய சாதனை என்னவென்றால், ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளை நடந்தது, கொலையும் நடந்தது, மர்ம விபத்துகள் நடந்தது என்பதுதான்.

கோடநாடு என்றால் ஜெயலலிதா என்று நினைக்கும் அளவுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கோடநாடுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. பல நூறு ஏக்கர் நிலங்களைத் தொடர்ச்சியாக வாங்கினார். இங்கே பெரிய பங்களாவைக் கட்டி அவ்வப்போது வந்து வாழ்ந்து வந்தார். சென்னையில் அவர் இல்லாவிட்டால் இங்குதான் இருப்பார். முதல்வராக இருக்கும்போதே பல வாரங்கள் வந்து இங்கே தங்கி இருக்கிறார். இந்த பங்களாவைக் கட்டுவதற்கு ஜெயலலிதாவுக்குப் பல வகையில் உதவி செய்தவர் கூடலூர் சஜீவன் என்பவர்.

ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோதே இந்த பங்களாவில் ஒரு கொள்ளை முயற்சி நடந்தது. ஆனால், அப்போது அது தடுக்கப்பட்டது. இதுகுறித்து கோத்தகிரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017 ஏப்ரல் 24-ம் நாள் நள்ளிரவில் கோடநாடு தேயிலைத் தோட்டத்தின் ஒன்பதாவது எண் நுழைவுவாயிலில் 11 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைகிறது. ஓம் பகதூர் என்ற காவலாளியைக் கட்டிவைத்துவிட்டு எஸ்டேட்டுக்குள் இந்த கும்பல் நுழைகிறது. இந்த ஓம் பகதூர் மூச்சுத்திணறலால் இறந்தே போகிறார். பங்களாவில் உள்ள மிக முக்கியக் கோப்புகளைத் திருடிச் சென்றுள்ளார்கள். கோப்புகள் என்றால் அவை என்னென்ன என்று இன்று வரை வெளிச்சத்துக்கு வரவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தவர். அப்படியானால் அவரது இந்தக் கோடநாடு பங்களாவில் இருந்தவை அரசாங்கக் கோப்புகளா என்பதும் தெரியவில்லை.

இந்த 11 பேர் கொண்ட கும்பலில் பெரும்பாலானவர்கள் கேரளாவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் இங்கிருந்து தப்பிச் சென்றார்கள். இதில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடியது காவல்துறை. கேரள மாநிலத்தைச் சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டார்கள். இதில் ஒருவர் சேலத்தைச் சேர்ந்த கனகராஜ். இவர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தவர். கனகராஜ் கைது செய்யப்பட்ட பிறகுதான் இது சாதாரண திருட்டு அல்ல. இதற்குப் பின்னால் பல்வேறு சதிகள் இருப்பது தெரியவந்தது. ஆனால், கோடநாடு பங்களாவில் சில சின்ன சின்ன பொருள்கள்தான் காணாமல் போனதாகவும், அவையும் கீழே கிடந்து எடுக்கப்பட்டுவிட்டது, கைப்பற்றிவிட்டோம் என்றும் காவல்துறை மறைக்க ஆரம்பித்தது.

ஜாமீனில் வெளியில் வந்த சேலம் கனகராஜ் மர்மமான முறையில் இறந்து போனார். அவர் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் பேட்டிகள் கொடுத்தார்கள்.இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான சயான் என்பவரது மனைவியும் மகளும் மர்மமான முறையில் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார்கள். இதில் சயான் மட்டும் தப்பினார். இந்தச் சம்பவம் நடந்த 15-வது நாள் கோடநாடு தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த தினேஷ் குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இப்படி ஐந்து பேர் மரணம் அடைந்த மர்மமான வழக்குத்தான் இந்தக் கோடநாடு வழக்கு.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் விபத்துகளிலும் தற்கொலையும் செய்து கொண்டு இறந்து போகிறார்கள் என்பது மர்மமாகவே இருக்கிறது. யாம் அறியேன் பராபரமே! அதற்கு இதுவரை நீதி கிடைத்ததா என்றால் இல்லை! நீதி கிடைக்காது என்பதும் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. ஜாமீனில் வெளியில் வந்த சயான் என்பவரும் வாளையாறு மனோஜ் என்பவரும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இறந்துபோன கனகராஜுக்கும் முதல்வர் பழனிசாமிக்கும் இதில் தொடர்பு இருக்கிறது என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்கள்.

முதல்வரின் பெயரை கனகராஜ் எங்களிடம் பயன்படுத்தினார் என்று வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறார்கள். தங்களுக்கு உதவியதாக சஜீவன் என்பவர் பெயரையும் சயானும் வாளையாறு மனோஜும் சொல்லி இருக்கிறார்கள். இந்த சஜீவன், இரண்டு நாட்களுக்கு முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீலகிரிக்கு வந்தபோது அரசு விழாவில் அருகில் இருந்துள்ளார். உதகையில் உள்ள விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு இருக்கிறார். உயரதிகாரிகளுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் அரசுக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் பங்கேற்றார். இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் சஜீவன் என்பவர் கலந்து கொண்டார். இந்த சஜீவன், அவரது தம்பி சுனில் ஆகிய இருவர் பெயரும் நீதிமன்ற வாக்குமூலத்தில் இருக்கிறது.

முதல்வர் மீது குற்றம் சாட்டியதால் சிறையில் தாங்கள் சித்ரவதை செய்யப்படுவதாக சயானும் மனோஜும் புகார் கூறியுள்ளனர். இந்தக் கோடநாடு கொலை - கொள்ளை வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி வடமலை முன்பு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் சஜீவனுக்கு அதிமுகவில் மாநில வர்த்தகர் அணி அமைப்பாளர் பதவியும் நீலகிரி மாவட்ட அதிமுக தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்துக்கு எதிராக அதிமுகவினரே நீலகிரியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கோத்தகிரியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னால் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள். கூடலூரில் மூன்று மாநிலச் சாலைகள் சந்திக்கும் இடத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள். அதன்பிறகும் சஜீவனைத் தனக்கு அருகில் எடப்பாடி பழனிசாமி வைத்துக் கொள்கிறார் என்றால் கோடநாடு விஷயத்தில் எப்படி உண்மைகள் வெளியே வரும்? இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான கிருஷ்ணபகதூர் என்பவர் தலைமறைவாகி பல மாதங்கள் ஆகியும் போலீஸார் இன்னமும் ஏன் கைது செய்யவில்லை?

இந்த ஆட்சி எத்தகைய சந்தேகத்துக்குரிய மனிதர்களின் கையில் சிக்கி இருக்கிறது என்பது இதில் இருந்து தெரியவில்லையா? ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளையடிக்கத் துணிந்தவர்களைத் தண்டிக்க வேண்டாமா? இதனிடையே தற்போது கோவை சிறையில் சயான், மனோஜ் ஆகியோருக்கு கொலை மிரட்டல் போன்ற சர்ச்சையில் கோடநாடு கொலை - கொள்ளை வழக்கு நடைபெற்று வருகிறது. இப்படி கொலை, கொள்ளை, விபத்துகள், தற்கொலைகள், கைதுகள், மிரட்டல்கள் கொண்ட மாபெரும் குற்றச்சம்பவம்தான் கோடநாடு சம்பவம். இதில் முதல்வர் பழனிசாமியின் பேரில் நேரடியாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன என்றால், அப்படி ஒருவர் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார் என்றால் அது தமிழ்நாட்டுக்கே அவமானம் இல்லையா? இந்த அவமானத்தைத் துடைக்க வேண்டாமா? ஒரு மாநிலத்தின் முதல்வர் மீது அரசியல் ரீதியான விமர்சனங்கள் வரலாம். ஆனால், இதுபோன்ற குற்றப் புகார்கள் வருமானால் அது தமிழக வரலாற்றுக்கே ஏற்பட்ட மாபெரும் தலைக்குனிவு ஆகும். அதனால்தான் தமிழகத்தை மீட்க வேண்டும் என்கிறோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!