ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக MLAக்கள் தகுதி நீக்கமா? கதையை முடிக்க களமிறங்கிய எடப்பாடி...

By sathish kFirst Published Oct 4, 2018, 1:21 PM IST
Highlights

ஜெ’ மறைவுக்குப் பின் முக்கிய அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் எதிராளிக்கு ‘இன்னும் ஒரு வாரத்தில் என்ன நடக்குது பாருங்க’ என்று பரஸ்பரம் ஜெர்க் கொடுத்துவருவது அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா மாதிரி ஆகிவிட்டது.

ஜெ’ மறைவுக்குப் பின் முக்கிய அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் எதிராளிக்கு ‘இன்னும் ஒரு வாரத்தில் என்ன நடக்குது பாருங்க’ என்று பரஸ்பரம் ஜெர்க் கொடுத்துவருவது அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா மாதிரி ஆகிவிட்டது.

 ஆனால் சமீப கால சில நிகழ்வுகள்  அந்த கெடுவுக்கு க்ளைமாஸ்  நெருங்கிவிட்டது போலவே தெரிகிறது. திமுகவுக்கும் அதன் தலைவர் ஸ்டாலினுக்கும் இன்னும் பத்து நாட்களில் அதிர்ச்சி காத்திருக்கு” என்று கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசினார். அதை வழக்கமான கெடு விதிப்பு போல எடுத்துக்கொள்ள முடியவில்லை.

முதல்வர் மீதும் பல்வேறு அமைச்சர்கள் மீதும் ஸ்டாலின் பல ஊழல் புகார்களை ஒவ்வொரு நாளும் வெளியிட்டு வழக்குத் தொடுத்து வரும் நிலையில்தான்... ஈழத்தில் திமுக- காங்கிரஸ் செய்த துரோகத்தைக் கண்டிக்கும் வகையில் அதிமுக சார்பில் தமிழகம் எங்கும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.

அதில் சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

“சேலத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் என்னை பேடி என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். ஒரே தொகுதியில் 9 முறை தொடர்ந்து நின்றிருக்கிறேன். உங்களைப் போல் பதவி வெறி பிடித்து அலையவில்லை. நீங்க வந்த விதம் வேறு... நான் வந்த விதம் வேறு. அப்பா பெயரைச் சொல்லி வரவில்லை. நான் கிளைச் செயலாளரில் ஆரம்பித்து, ஒன்றியப் பொறுப்பு, மாவட்டப் பொறுப்பு, தலைமைப் பொறுப்பு என்று விசுவாசமாக இருந்து வந்துள்ளேன். அதிமுகவைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை.

எங்கள் மீது ஸ்டாலின் வரிசையாக புகார் சொல்லிவருகிறார். எதைச் சொன்னாலும் எடுபடாது. இன்னும் ஒரு பத்து நாள் கழிச்சு பாருங்க என்ன நடக்குனுனு. எப்படி ஆகப் போகுதுன்னு’’ என்று எச்சரித்தார்.

அதே நேரம் சில நாட்களுக்கு முன் கோட்டையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களான கருணாஸ், ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் வழங்குவது குறித்தும், அவர்களை தகுதி நீக்கம் செய்வது குறித்தும் ஆலோசனை நடப்பதாக தகவல்கள் வெளியாகின. இது தனக்கு அதிர்ச்சி தருவதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், அடுத்த தகுதி நீக்கத்துக்கு அரசு தயாராகிறதா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் கோட்டை வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவலோ இன்னும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

“சபாநாயகருடன் முதலமைச்சர் நடத்திய ஆலோசனையில் கருணாஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பெயர் மட்டுமல்ல... திமுக எம்.எல்.ஏ.க்களின் பெயர்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கான பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

சட்டமன்றத்துக்குள் கடந்த வருடம் ஜூலை 19 ஆம் தேதி குட்காவை எடுத்து வந்த விவகாரத்தில், ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில் தங்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று ஸ்டாலின் தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்த விஷயத்தில் திமுக உறுப்பினர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளலாமா என்று ஆளும் தரப்பு வட்டாரத்தில் சட்ட நிபுணர்களோடும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் ஏற்கனவே அரசுத் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடும்போது,

‘உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விளக்கமளிக்கட்டும். மேலும் சபை நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. சபை எடுக்கும் முடிவுகளை எதிர்த்து வேண்டுமானால் நீதிமன்றத்தை நாடலாம், ஆனால் தற்போது சபை எந்த முடிவையும் எடுக்காத நிலையில், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்று தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே ஓ.பன்னீர் உள்பட 11 பேர் மீது சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில், ‘சபாநாயகர் எடுத்த முடிவின் மீதுதான் நீதிமன்றம் கருத்து சொல்ல முடியும். சபாநாயகரை ஒரு முடிவு எடுக்குமாறோ,எடுக்கக் கூடாது என்றோ சொல்ல முடியாது’ என்று சொல்லி தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்புதான் கோட்டையில் நடந்த ஆலோசனையில் முக்கிய இடம்பிடித்துள்ளது. சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டுவந்த வழக்கில் ஸ்டாலின் உள்பட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றுதான் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதில் தீர்ப்பு என்பது சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றுதான் வரும்.

இதற்கிடையில் அந்த விவகாரத்தை வைத்து திமுக உறுப்பினர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுத்தால் என்ன? தகுதி நீக்கம் செய்யப்பட்டால் மீண்டும் அவர்கள் நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு நடத்தட்டும். ஏற்கனவே 18 பேர் தகுதி நீக்க வழக்கு ஒன்றரை வருடத்துக்கும் மேலாக நடக்கிறது. அதுபோல் இதுவும் நடக்கட்டும்” என்று கோட்டையில் நடந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள் தலைமைச் செயலக சோர்ஸ்கள்.

ஒருவேளை குட்கா வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது தகுதி நீக்க நடவடிக்கை பாயலாம் என்ற கோட்டை ஆலோசனையையும், ‘இன்னும் பத்து நாட்களில் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி காத்திருக்கு’ என்று சேலத்தில் முதல்வர் விட்ட பகிரங்க எச்சரிக்கையையும் முடிச்சு போட்டு பார்த்தால், ஏதோ நடக்கப் போவது தெரிகிறது.

பத்து நாள் பத்தாட்டி இன்னொரு பத்துநாள் கூட எடுத்துக்கிட்டு எதையாவது பண்ணித்தொலைங்க பாஸ். வரவர கெடு அரசியல் ரொம்ப போரடிக்குது.

click me!