கிளைக் கழகச் செயலாளர் TO முதலமைச்சர் வேட்பாளர் : எடப்பாடி பழனிச்சாமியின் 46 ஆண்டு அரசியல் சதுரங்கம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 7, 2020, 4:17 PM IST
Highlights

46 ஆண்டுகளுக்கு முன் சாதாரண கிளைக் கழக செயலாளராக பொறுப்பு வகித்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், இடைப்பட்ட காலத்தில் படிப்படியாக உயர்ந்து அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் வரை உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எவ்வாறு படிப்படியாக கட்சியில் முன்னேறி இந்த இடத்திற்கு உயர்ந்தார் என்ற விவரத்தை அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:- 

அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற போட்டி,  இல்லை யுத்தமே அதிமுகவில் நடந்து முடிந்துள்ளது. முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம்  ஆகியோருக்கு இடையே நிலவி வந்த போட்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. (இன்று) மே-7 ஆம் தேதி முறைப்படி அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என கடந்த 28ம் தேதி அக்கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், அதே போன்று இன்று தமிழக  துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதேபோல் கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல்  குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது.

இந்நிலையில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் எந்த நிலையில் இருந்து அவர் இந்நிலைக்கு உய்ர்ந்துள்ளார். அதிவது அவர் வகித்த பதவிகள் என்னென்ன எந்த நிலையில் இருந்து அவர் தற்போது முதலமைச்சர் வேட்பாளர் வரை உயர்ந்துள்ளார் என்பதற்கான தகவலை அதிமுக தலைமைக்கழகம் ஆண்டு மற்றும் பதவி வாரியாக வெளியிட்டுள்ளது. அதில், 1974-ஆம் ஆண்டு முதல் கழக உறுப்பினர் மற்றும் அவரது சொந்த ஊரான எடப்பாடி ஒன்றியம் சிலுவம்பாளையம் கிளைக் கழகச் செயலாளராக முதன் முறையாக பொறுப்பு வகித்தார். 1988-ல் எடப்பாடி ஒன்றியம் முழுவதும் மாண்புமிகு அம்மா அவர்களுடைய பெயரில் கொடிக்கம்பங்கள் அமைத்து அம்மா பேரவை தொடங்கினார் .1990 இல் சேலம் வடக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் பதவி வகித்தார்.1991இல் சேலம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பொறுப்பு வகித்தார். 2006 ஜூலையில் கழக கொள்கை பரப்புச் செயலாளராக உயர்ந்தார்.
2007-இல் கழக அமைப்புச் செயலாளராக ஆனார். 

2014-இல் கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர், கழக தலைமை நிலையச் செயலாளர் மற்றும் சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளராக பதவி வகித்தார். 2017 முதல் கழக இணை ஒருங்கிணைப்பாளர், கழக தலைமை நிலையச் செயலாளர் மற்றும் சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பு வகித்தார். அதேநேரத்தில் 1989-இல் மாண்புமிகு அம்மா அவர்களின் தலைமையை ஏற்று எடப்பாடி தொகுதியில்  சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991 முதல் 1996 வரை எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.1992 முதல் 1996 வரை சேலம்  மாவட்ட திருக்கோயில்களின் வாரிய தலைவராக பதவி வகித்தார்.1998-1999 திருச்செங்கோடு நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். 2003 இல் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் தலைவராக பதவி வகித்தார்.2011 முதல் மீண்டும் எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாண்புமிகு அம்மா அவர்களுடைய அமைச்சரவையில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பதவி வகித்தார். 

2016 முதல் தொடர்ந்து எடப்பாடி சட்டமன்ற உறுப்பினராக மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு மாண்புமிகு அம்மா அவர்களுடைய அமைச்சரவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பதவி வகித்தார்.16-2 -2017 முதல் தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்றார் என ஆண்டு வாரியாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 46 ஆண்டுகளுக்கு முன் சாதாரண கிளைக் கழக செயலாளராக பொறுப்பு வகித்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், இடைப்பட்ட காலத்தில் படிப்படியாக உயர்ந்து அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் வரை உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!